TN 12th Result 2023: தஞ்சாவூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வில் 62 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தேர்ச்சி சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிட்டத்தக்கது. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பெற்றோர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். 


இவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை. தேர்வு முடிந்ததும், விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 79 மையங்களில் விறுவிறுப்பாக நடந்தது. 


முன்னதாக மே 5-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவுகள் 8-ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் வெளியிட்டார்.


12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 227 பள்ளிகளில் 12,712 மாணவர்களும், 14,325 மாணவிகளும் என மொத்தம் 27,037 ஆகியோர் தேர்வு எழுதினர். இதில், 11,830 மாணவர்கள், 13,904 மாணவிகள் என மொத்தம் 25,734 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 95.18 சதவீதம் ஆகும்.


இத்தேர்வில் 16 அரசு பள்ளிகள், 33 மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பிரிவு (ஸ்டேட் போர்டு) 6 பள்ளிகள், பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகள் 5, முழுவதுமாக அரசு உதவி பெறும் பள்ளி 1, சமூக நலத்துறை சார்பில் செயல்படும் பள்ளி 1 என மொத்தம் 62 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இப்பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பெற்றோர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.


கடந்தாண்டை விட இந்தாண்டு 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 13 அரசு பள்ளிகள் கடந்தாண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 16 பள்ளிகளாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு 39 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீத சேர்ச்சி பெற்ற நிலையில்  தற்போது 33 பள்ளிகளாக குறைந்துள்ளது. இது அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்து கொண்டே வருவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். 


தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. கடந்த 2018 ம் ஆண்டு 90.25 சதவீதம், 2019ம் ஆண்டு 91.05 சதவீதம், 2020 ம் ஆண்டு 92.89 சதவீதம்,  2022ம் ஆண்டு 94.69 சதவீதம், 2023ம் ஆண்டு (தற்போது) 95.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 16 வது இடத்தில் உள்ளது.