தஞ்சாவூர்: தஞ்சாவூர் பான்செக்கர்ஸ் கல்லூரியில் இயற்கையைக் காப்போம், வாழ்வுரிமையை மீட்போம் என்ற தலைப்பில் “பசுமைப் பயணம்” என்ற மாபெரும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் இதை ஒட்டி சாலையில் தூய்மைபணி மேற்கொண்டு 1 டன் நெகிழிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது 

Continues below advertisement

தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலையில் அமைந்துள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் முன்னெடுப்பில் இன்று தமிழக துறவியர் பேரவை, தமிழ்நாடு அய்க்கஃப் தோழமை சூழலியல் இயக்கங்கள் தஞ்சாவூர் மையம் ஆகியவை இணைந்து நடத்திய "பசுமைப் பயணம்" மாபெரும் நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு இயற்கையைக் காப்போம், வாழ்வுரிமையை மீட்போம் என்னும் பசுமைப்பயணத்தின் தொடக்கமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பயணத்தை கடந்த 5-ந் தேதி தொடங்கியவர்கள் தஞ்சைக்கு நேற்று மாலை வந்து சேர்ந்தனர்.

Continues below advertisement

இதையடுத்து பூண்டி புஷ்பம் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில், தஞ்சாவூர் தெற்கு ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் டாக்டர் பாலசுந்தரம் முன்னிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிர்புறத்தில் சைக்கிளில் பயணம் செய்து வந்தவர்களை மேளதாளத்துடன் வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று காலை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி அமைந்திருக்கும் விளார் புறவழிச்சாலையின் இருபுறங்களிலும் தூய்மை செய்யப்பட்டு ஒரு டன் நெகிழிப் பொருட்கள் ஒப்படைக்கும் பணி நடைபெற்றது. இந்த விழாவில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) முதல்வர் அருட்சகோதரி விக்டோரியா வரவேற்றார். தஞ்சாவூர் மறைமாவட்டம் ஆயர்சகாயராஜ், தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ணமடம் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அல்மாஸ்அலி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வைப் பற்றிய அறிமுகத்தை தமிழக துறவியர் பேரவைத் தலைவர் முனைவர் அருட்சகோதரி மரியபிலோமி வழங்கினார்.

ஒரு டன் நெகிழிப் பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியை எம்.பி., ச.முரசொலி துவங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் கண்ணன் 1 டன் நெகிழிப் பொருட்களைப் பெற்றுக் கொண்டார். இதற்காக சிறப்பாக பணிபுரிந்த மாணவ, மாணவிகளை பாராட்டி எம்எல்ஏ., துரை சந்திரசேகரன் மரக்கன்றுகள் வழங்கி கௌரவித்தார். மேலும் விளார் புறவழிச்சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடும்பணியினை மேயர் சண். இராமநாதன், சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பராமரிப்புப் பணியினை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் செல்வக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம்பூபதி பூமியினைக் காப்போம் என்ற விழிப்புணர்வு குறித்து 50,000 நபர்களிடம் பெற்ற கையொப்பங்கள் கோப்பினை தமிழக துறவியர் பேரவைத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். விளார் புறவழிச்சாலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி 800மீட்டர் தடுப்பு வேலி அமைப்பினை தஞ்சாவூர் ஆதிகாலத்து அலங்கார மாளிகை துணை பொது மேலாளர் ஜோதி கணேஷ் அமைத்துக் கொடுக்க ஒப்புதல் கொடுத்தார். தமிழ்நாடு அய்க்கஃப் குழுவினர் வீதி நாடகம் நடத்தினர். அடைக்கல அன்னை சபை தஞ்சை மாநில தலைமைச் சகோதரி ஜெஸிந்தாமேரி "சுற்றுச்சூழல் பாதுகாப்பு" உறுதிமொழி வழங்கினார். மதர் தெரசா பவுண்டேசன் தலைவர்சவரிமுத்து நன்றியுரை வழங்கினார்.

இதையடுத்து திருக்கானூர்பட்டி நான்குவழி பிரிவு சாலையில், தஞ்சாவூர் வனவிரிவாக்க சரகம் வன விரிவாக்க சரகர் கிருஷ்ணசாமி "மரக்கன்றுகள் நடுதல்" நிகழ்வைத் தொடங்கி வைத்தார். மதியம் "சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலையில் அண்ணா நூற்றாண்டு அரங்கில் "பசுமைப் பயணம்" குறித்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.