தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகர் கல்லறைத் தோட்டத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு நடத்தினர்.
இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2- ம் தேதி உலகம் முழுவது உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கல்லறைத்திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தென்னிந்தியாவில் கிறிஸ்தவர்களால் கல்லறைத் திருநாள் நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டது வருகிறது.
அன்று தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களுக்குச் சென்று திருப்பலி, சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பின்னர் அவரவர் முன்னோர்களின் குடும்ப கல்லறைகளுக்குச் சென்று அங்கு மலர்களால் அலங்கரிப்பர். பின்னர் மெழுவர்த்தி ஏற்றி முன்னோர்களையும், குடும்பத்தில் இறந்தவர்களையும் நினைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் இறந்தோரை நினைவுகூரும் இந்த நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையொட்டி கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு இருந்தன. தஞ்சை தூயபேதுரு ஆலய கல்லறை தோட்டம், தஞ்சை திரு இருதய பேராலய கல்லறை தோட்டம், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள புனித சூசையப்பர் கல்லறை தோட்டம், புனித வியாகுல அன்னை ஆலய கல்லறை தோட்டம், மிக்கேல் சம்மனசு கல்லறை தோட்டம் உள்பட அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது முன்னோர்களின் சமாதி முன்பு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் வழிபட்டனர்.
சிலர் முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, குளிர்பானம், பிஸ்கட் போன்றவற்றை கல்லறை முன்பு படைத்து வழிபட்டனர். கல்லறை திருநாளையொட்டி கல்லறை தோட்டங்கள் முன்பு ஏராளமான பூக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மெழுகுவர்த்திகளும் விற்பனை செய்யப்பட்டன.
இதேபோல் பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறைத்திருநாள் நடைபெற்றது. பேராலயத்திற்குள் லூர்து சேவியர் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து பேராயத்திற்குள் உள்ள லூர்து சேவியர் கல்லறையை பேராலய அதிபர் உள்ளிட்ட தந்தையர்கள் புனிதம் செய்து வணங்கினர்.
நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாக்கோட்டை கிராம கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைகளை சுத்தம் செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தனர். இதில் மாதாக்கோட்டை பங்குத்தந்தை தலைமையில் அருட்சகோதரிகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வல்லம் பெரியார் நகர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளை கடைப்பிடித்தனர். அப்பகுதியில் இருந்த கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி தங்களின் முன்னோர்களை நினைத்து குடும்பம், குடும்பமாக வந்து வழிபாடு நடத்தினர்.
இதேபோல் மகர்நோன்புச்சாவடி, பள்ளியக்ரஹாரம், அம்மன்பேட்டை, திருவையாறு, வயலூர், அய்யம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மேலும் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்காரஅன்னை பேராலய கல்லறைத் தோட்டம், செம்போடை கல்லறைத் தோட்டம், ஊசி மாதா கோயில் கல்லறைத் தோட்டம், பெருமாண்டி கல்லறைத் தோட்டம், கருப்பூர் கல்லறைத் தோட்டம் ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் விதமாக இனிப்புகள், பழங்கள் வைத்து படையலிட்டனர். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.