தஞ்சாவூர்: தஞ்சாவூரில் எம்.பி., அலுவலக திறப்பு விழா, கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க நேற்று இரவு தஞ்சைக்கு வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக தஞ்சைக்கு வருகை தர உள்ளார். தஞ்சையில் இன்று நடக்கும் கட்சி நிர்வாகி இல்ல திருமணவிழா, எம்.பி., அலுவலக திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் பங்கேற்கிறார். இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து சாலை வழியாக இரவு தஞ்சாவூருக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா (தொழில் துறை), கோவி. செழியன் (உயர் கல்வித் துறை), மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, தமிழக அரசின் தில்லி மேலிட சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), என். அசோக்குமார் (பேராவூரணி), மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்பட ஏராளமானோர் வரவேற்றனர். துணை முதல்வருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வந்தார். பின்னர் தஞ்சையில் உள்ள சங்கம் ஓட்டலில் உதயநிதி ஸ்டாலின் தங்கினார்.
தொடர்ந்து நாளை காலை தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் முரசொலி செல்வம் படத்தை திறந்து வைக்கிறார். பின்னர் தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே தஞ்சை எம்.பி., அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். இதையடுத்து பவள விழாவை முன்னிட்டு திருவையாறு தெற்கு ஒன்றியம், கண்டியூரில் 75 அடி உயரத்தில் கட்சி கொடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுகிறார்.
மேலும் திருவையாறு தெற்கு ஒன்றியம், கோனேரிராஜபுரத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் வெண்கல உருவச் சிலைகள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார். இதையடுத்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். . மேல வஸ்தா சாவடி பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் மத்திய மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களைச் சந்திக்கிறார். தொடர்ந்து கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். துணை முதல்வர் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.