தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது கடந்த மாத தொடக்கம் முதலே மழை பெய்து வந்த நிலையில், வடகழிக்கு பருவமழை தொடங்கியது முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மாதம் மழை அதிகளவு இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை:


சென்னையில் நேற்று இரவு கனமழை பல இடங்களிலும் கொட்டித் தீர்த்தது. இதனால், இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. அண்ணாநகர், அசோக் பில்லர், கிண்டி, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, பாரிஸ், வியாசர்பாடி, அசோக்நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது.






இதனால், காலையில் பணிக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மாதம் தொடர்ந்து மழை தீவிரமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.


10 மணி வரை:


தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் பொதுவாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற பெரு பாதிப்பை சென்னை கடந்த சில வருடங்களாகவே சந்தித்து வருகிறது. கடந்த மாதம் சென்னைக்கு வர இருந்த பெருமழை வராததால் சென்னை தப்பியது. இருப்பினும் இந்த மாதம் மழையின் தாக்கம் தீவிரம் அடையும் என்பதால் அரசு சென்னையில் தண்ணீர் தேங்கம் இடங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.