தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை ஊராட்சியில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


சிறப்பு கிராம சபை கூட்டம்


இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கலந்துகொண்டார்.  பின்னர் அவர் கூறியதாவது: முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக இன்று தஞ்சாவூர் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.


அந்த வகையில் ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்று வரும் கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை- உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த கிராமசபை கூட்டத்தில் விவாதித்து. பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


சமபந்தி போஜனம் 


பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் தலைவர் தீபக் ஜேக்கப் சமபந்தி போஜனம் நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் எம்.எல்ஏ., டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி, ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவர் பார்வதி சிவசங்கர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், ஈச்சங்கோட்டை ஊராட்சித் தலைவர் கவிதாவீரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.