தமிழ்நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவாரூர் நகர பகுதிக்கு உட்பட்ட புதுத் தெருவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னால் அமைச்சர் காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று கூடுதலாக உள்ளது. அதனை அரசு விழிப்புணர்வோடு செயலாற்றி மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையாக உள்ளது.




டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை என்ற வேதனையுடன் உள்ளார்கள். எப்படி என்று சொன்னால் தென்மேற்கு பருவ மழையால் நெல் பயிர்கள் பாதிப்பு, வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு, அதுமட்டுமன்றி பருவம் தப்பி பெய்த மழையால் நெல் பயிர்கள் பாதிப்பு இந்த மூன்று மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. முழுமையாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.




அதுமட்டுமன்றி இன்று சம்பா சாகுபடி தயாராகி கொண்டிருக்கிறது. 15 நாட்களாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. 15 நாட்களாக சம்பா சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேளையில் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்பட வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த பொழுது அதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு உத்தரவு ஆகிவிட்டது என தெரிவித்தார்.


வெறும் உத்தரவு மட்டும் நெல்லை கொள்முதல் செய்து விடமுடியாது நெல்லை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும் மற்றும் தராசு அனுப்பி வைக்க வேண்டும், சணல் வேண்டும், சாக்கு அனுப்பி வைக்க வேண்டும் அதற்கான பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் இவை எல்லாம் செய்து முடித்த பின்னரே விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியும். 15 நாட்களாக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது எனவே உடனடியாக நெல்லை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.


அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக முடியாது. அது நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றல்ல நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயத்தை விவசாயிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனவே ஆன்லைன் முறையை ரத்து செய்து எல்லா காலங்களிலும் போல நடைமுறை சிக்கல் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்து முழுமையாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.