வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம், நீலாயதாட்சி அம்மன் கோவில் என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் பங்களிப்போடு வழக்கமான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  இருந்த நிலையில் திருமணம் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து வசதி இல்லாமலும் வாகன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அரசின் முழு முயற்சியால் தடுப்பூசி செலுத்துவதில் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் தடுப்பூசி முகாம்கள் அனைத்தும் பெரும்பாலும் தமிழகம் முழுவதும் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.



 

தற்போது கொரணா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்திருந்தது. இந்தநிலையில் வழிபாட்டுத்தலங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் திறக்கப்பட்டும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கையின் பேரில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டு தளங்கள் திறக்க நேற்று அனுமதி அளித்தது. இதனையடுத்து நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா, நாகை நீலாயதாட்சி அம்மன், நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் மற்றும் எட்டுக்குடி முருகன் கோவில், சிக்கல் சிங்காரவேலன் ஆலயம் என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு காலை முதலே பக்தர்கள் இறைவனை வழிபட்டு வருகின்றனர். நாகூர் தர்கா இன்று அதிகாலை திறக்கப்பட்டு அங்கு இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மதத்தினரும் வழிபட்டனர். இதேபோல் அனைத்து இந்து கோவில்களிலும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் இன்று பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்போடு பிரார்த்தனை செய்யப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.



 

நாகை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்குகொண்டனர், முன்னதாக வேளாங்கண்ணி பேராலயத்தில் தானியங்கி கிருமிநாசினி வைக்கப்பட்டு அங்கு ஊழியர்கள் கிருமிநாசினி பயன்படுத்தியும் முக கவசம் அணிந்து உள்ளே வரவேண்டுமென அவர்களை அறிவுறுத்தினர். வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வரத்து குறைவு காரணத்தால் வாழ்வாதாரம் பாதித்திருந்த வியாபாரிகளும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



 

இதேபோல் வேளாங்கண்ணி நாகூர் கோடியக்கரை தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை காரைக்கால் சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளிட்ட நவகிரக ஆலயங்களுக்கும் வரும் பக்தர்கள் பேருந்து மற்றும் ரயில் மூலமாக நாகை வந்து இறங்கி அங்கிருந்து வாடகை வாகனம் மூலம் சென்று வருவர் இதற்காக ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வாகனத்தை வைத்துக்கொண்டு ஏராளமான வாகன ஓட்டிகள் காத்திருப்பர் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் அதிக வருமானத்தை ஈட்டும் வாகன ஓட்டிகள் கடந்த சில மாதங்களாக வருமான இழப்பை சந்தித்து வந்த நிலையில் இன்று வாகன மீண்டும் பரபரப்பான நிலையில் மாறியுள்ளனர் தற்போது பக்தர்கள் வரத்து தொடங்கி உள்ளதால் நல்ல வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கும் வாகன ஓட்டிகள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த வருமானம் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதியளித்த தமிழக அரசுக்கு வேளாங்கண்ணி பேராலயம் சார்பிலும் மற்றும் அனைத்து தரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.