தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காராமணிதோப்பு பகுதியில் விவசாயிகள் வெண்டை சாகுபடியில் மும்பரம் காட்டி வருகின்றனர். நெல் சாகுபடிக்கு மாற்றாக காய்கறி சாகுபடியில் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தஞ்சாவூரை அடுத்து காராமணி தோப்பு கிராமத்தில்  விவசாயி செல்வராஜ் வெண்டைக்காய் சாகுபடியில் தற்போது நல்ல லாபத்தை பெற்று வருகிறார். இது குறித்து விவசாயி செல்வராஜ் கூறியதாவது:


வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் பயிரிடலாம்


வெண்டைக்காய் சாகுபடியைப் பொருத்தவரையில் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் பயிரிடலாம். வெண்டைக்காய் சாகுபடியில் தண்ணீர் அளவுடன் இருக்க வேண்டும். தண்ணீர் அதிக அளவில் விளை நிலத்தில் இருந்தால், சாகுபடியானது பெரிய அளவில் மகசூல் கிடைக்காது. மேலும் மற்ற காய்கறி சாகுபடிகளில் வெண்டைக்காய் சாகுபடியே அதிக அளவில் லாபத்தை ஈட்டி தரக்கூடிய ஒரு சாகுபடியாகும்.




நிலம் முழுவதும் பட்டம் இட வேண்டும்


பெரும்பாலும் மேடான பகுதிகளிலே இந்த வகையான சாகுபடிகளை செய்ய முடியும். உதாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டைக்காய் பயிரிட வேண்டும் என்றால் முதலில் விளை நிலங்களை தயார் படுத்துவதற்காக ஏர் ஒட்டி விட்டு பின்பு, புற்கள் அதிக அளவில் இருந்தால் அதனை எடுத்துவிட்டு இயற்கை உரமோ அல்லது செயற்கை உரமோ தெளித்த பின்னர் அந்த நிலம் முழுவதும் பட்டம் இட வேண்டும். அதாவது வாய்க்கால் முறையில் பல வரிசைகளில் கோடு கோடாக உருவாக்க வேண்டும்.


இந்த வாய்க்காலை 1.5 அடிக்கு ஒரு வாய்க்காலாக முறைப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 700 கிராம் வெண்டைக்காய் விதைகளை வாய்க்கால்களில் தேவையான அளவு மட்டுமே தண்ணீர் செலுத்திய பிறகு ஒரு வாய்க்கால் விட்டு ஒரு வாய்க்கால்களில் முழுவதுமாக விதைகளை செலுத்த வேண்டும்.


30 நாட்களில் வெண்டைக்காய்களை ஒடித்து எடுக்கலாம்


வெண்டைக்காயானது முதலில் பூ வந்து அதிலிருந்து தான் காய் வரும் நிலையில் இந்த வெண்டைக்காய் சாகுபடியானது சரியாக விதை செலுத்திய 30- 35 நாள்களில் வெண்டைக்காய்களை ஒடித்து எடுக்கலாம். மேலும் ஒரு முறை விதைக்கப்படும் இந்த வெண்டைக்காய் விதையின் வாழ்நாள் ஆனது மூன்றில் இருந்து நான்கு மாத காலம் ஆகும். இந்த நான்கு மாதங்களும் செடிகளில் வளரும் வெண்டைக்காய்களை முதல் 30-35 நாட்கள் பிறகு ஒடித்த பின்னர், சாகுபடியானது கடைசி மூன்று மாதங்களில் அதிக அளவில் இருக்கும். இந்த வெண்டைக்காய்களை ஒருநாள் விட்டு ஒரு நாள் சாகுபடி செய்யலாம்.


ஒருநாள் விட்டு ஒருநாள் காய்கள் அறுவடை


ஒரு நாள் ஒடிக்கும் வெண்டைக்காய் மறு நாளே அந்த செடிகளில் வளர்ந்து விடும் எனவே அந்த வெண்டைக்காய் முத்திவிடுவகற்கு முன்னதாகவே, கண்காணித்து ஒடிக்க வேண்டும். மேலும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு முறை (முதல் 30 நாட்களில்) சாகுபடி செய்யப்படும் வெண்டைக்காய்களின் எடை அதிகபட்சம் 60 லிருந்து 80 கிலோ இருக்கும்.


உதாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்யும் போது நான்கு மாதத்தில் 50 லிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். விவசாயிகளை பொறுத்தவரையில் இடைத்தரகர்கள் இல்லாமல் வெண்டைக்காய்களை மக்களிடம் நேரடியாக விற்பதால் முழுமையான லாபம் பெறுகிறார்.


சில தொற்றுக்கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது


இந்த வெண்டைக்காய் சாகுபடியை பொறுத்தவரையில் செடிகளில் பூச்சிகள் மற்றும் சில தொற்று கிருமிகள் தாக்கக்கூடிய அபாயம் உள்ளது. அதில் முக்கியமாக இந்தச் செடிகளில் உள்ள இலையை திருப்பிப் பார்த்தால் மஞ்சள் நிறத்தில் வளைந்து காணப்படுவது போல் இருந்தால் பச்சை கொசு, மஞ்சள் கொசு இந்த இரண்டு வகையான பூச்சிகளும் அந்த பாதிக்கப்பட்ட ஒரு செடியில் இருந்து அந்த ஒரு கிருமியை தன்னுள் ஏற்று மற்ற செடிகளில் பரப்பி விடும். இதனால் மொத்த வெண்டைக்காய் செடியும் பாதிக்கப்படும். எனவே காய்கள் வளராமல் பெரிய அளவில் நஷ்டத்தை கொடுக்கும். இந்த ஒரு பாதிப்பை தடுப்பதற்காக முன்கூட்டியே செயற்கை உரங்களான (யூரியா, காம்ப்ளக்ஸ்) மற்றும் இயற்கை உரங்கள்( ஆட்டுபுழுக்கை, மாட்டுச்சாணம், கோமியம், சர்க்கரை, விளைநிலத்தின் மண் ஆகியவை கலந்த கலவை) பயன்படுத்தினால் இந்த தொற்றுக்கிருமி தாக்கத்திலிருந்து செடிகளை பாதுகாக்கலாம். இதிலும் செயற்கை உரங்களை காட்டிலும் இயற்கை உரங்களே அதிக அளவில் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.