திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட சேங்காளிபுரம் அரசு துவக்கப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 116 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வருடம் தோறும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு பள்ளி தலைமை ஆசிரியர் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்து பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர் அறிமுக விழா போன்றவற்றை நடத்தி இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா கடந்த ஏப்ரல் மாதம் சேங்காலிபுரம் அரசு துவக்கப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவித்து அதை துண்டறிக்கையாக அச்சிட்டு சுற்றுப்புற கிராமங்களில் கொடுத்தார். மேலும் பள்ளியில் சேரும் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும் இந்த பரிசளிப்பு விழா காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளில் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சேங்காலிபுரம் அரசு துவக்கப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராமன் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்த கல்வி ஆண்டில் பள்ளியில் சேர்ந்த 21 மாணவ, மாணவிகளின் பெயர்கள் வெள்ளை காகிதத்தில் எழுதப்பட்டு குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் தேர்வான ஒன்றாம் படிக்கும் விஷாலினி என்கிற மாணவிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியில் சேர்ந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
குறிப்பாக மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்களது எதிர்கால லட்சியம் குறித்து கேட்டறிந்து ஆட்சியர் மருத்துவர் என அவர்களது பெயருடன் எழுதப்பட்டு பேட்ஜ் போன்று பரிசு வாங்கிய மாணவ மாணவிகளின் சட்டைப் பையில் குத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் இந்திரா கூறுகையில், ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தபடி குலுக்கல் முறையில் ஒருவரை தேர்ந்தெடுத்து தங்க நாணயம் வழங்கியுள்ளோம். தொடர்ந்து எங்கள் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்