தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள 8 கலை பொருட்களை பொதுமக்கள் பார்வைக்காக அலங்காரமாக வைக்கப்பட்டுள்ள காட்சி பெட்டகத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்து கூறுகையில், ஒரு குறிப்பிட்ட புவி சார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு அந்தப் பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப்பகுதிக்கு ஏற்ப தனித்தனி பண்புகள் அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பகுதிசார் பொருட்களின் விளைச்சல் அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாக திகழ்கின்றன. 195 இந்திய பொருள்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாய மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் 57 ஆகும். தமிழகத்தில் 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் 8 கலைப் பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.




அப்பொருட்களான, பழங்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி.17 நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்திலிருந்து உள்ள வீணை,  கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், நாடகம் போன்ற கலைகளுக்குப் பெயர்பெற்ற தஞ்சையில் 19 ஆம் நூற்றாண்டில் தலையாட்டி பொம்மைகள் உருவாக்கப்பட்டன. சரபோஜி மகாராஜாவின் காலத்தில் உருவாக்கம் செய்யப்பட்ட தலையாட்டி பொம்மை, இந்திய கலை மரபில் ஓவியக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாய் வளர்ந்து செழித்து வரும் சிறப்பு வாய்ந்தது. ஆயிரம் ஆண்டு கால ஓவியங்களையும், பின்னாளில் தீட்டப்பெற்ற பல்வேறு வகையான ஒவியங்களையும் ஒருங்கே கொண்டு திகழும் ஒரே கோயில் தஞ்சைப் பெரிய கோயிலாகும். இக்கோயிலில் வளர்ந்த இக்கலை பின்னாளில் தஞ்சைப்பாணி ஓவியம் என்னும் ஒரு புதிய ஓவிய மரபை உலகுக்குத் தந்தது. அதுவே தஞ்சாவூர் ஓவியங்கள். இரண்டாம் சரபோஜியினால் (1777–1832) தஞ்சாவூர் மராத்திய அரசு ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூரில் அறிமுகப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் கலைத்தட்டு,  நெட்டி தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள குளம், ஏரி போன்றவற்றில் விளைகிறது. இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும். இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்வதுதான் நெட்டி வேலைப்பாடுகள்,   சுவாமிமலை பகுதியில் மட்டும் பல ஆண்டுகாலமாக செய்து வரும் சுவாமிமலை வெண்கலச்சிலைகள், தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர் மற்றும் சரபோஜி மன்னர்களுக்கு பல விதமான பட்டுத்துணிகளை வடிவமைத்து தருவதற்காகவே செளராஷ்ட்ரா சமூகத்தை திருபுவனத்தில் குடியமர்த்தினார்கள். இன்றைக்கும் தமிழகத்திலேயே தலை சிறந்த விளங்கும் திருபுவனம் பட்டு புடவை, நாச்சியார்கோயில் அருகிலுள்ள ஆற்றுப் படுக்கையில் கிடைக்கும் வெளிர் பழுப்பு மணல் பிரத்தியேகமானது என்றும் தங்களது தயாரிப்புகளை வடிவமைக்க மிகவும் பொருத்தமானது என்று இவர்கள் கண்டுபிடித்ததால் இவர்கள் நாச்சியார்கோயிலில் குடியேறினர். அந்த பழுப்ப மண்ணில் செய்வது தான் நாச்சியார்கோவில் குத்து விளக்கு ஆகியவை ஆகும்.




இத்தகைய 8 வகையான  கலைப் பொருட்களான தஞ்சாவூர் வீணை, தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு, நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை வெண்கலச்சிலை, திருபுவனம் பட்டு புடவை மற்றும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு ஆகியவைகளை பற்றி  பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் சிறந்த கலைஞர்களை கொண்டு கலை நுட்பத்தோடு தயாரிக்கப்பட்டு கலெக்டர்  அலுவலகத்தில் காட்சி பெட்டகத்தில் அலங்காரமாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. இந்த காட்சி பெட்டகத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பார்வையிட்டு அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வருவாய் சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்ரீகாந்த், துணைஆட்சியர் பயிற்சி ஜஸ்வந்த்கண்ணன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், காட்சி பெட்டகத்தை வடிவமைத்து ஒருங்கிணைப்பு செய்த போட்டோகிராபர் ஓவியர் மணிவண்ணன், வீணைக் கலைஞர் சின்னப்பா மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.