தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரி மைதானத்தில் காலை முதல்வர் வருகைக்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பந்தல்கால் நட்டார். பின்னர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த வாரம்,

  மக்களைத் தேடி முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ் 55 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது எவ்வளவு தீர்வு காண முடியுமோ அந்த அளவுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.




இதைத் தொடர்ந்து தஞ்சாவூருக்கு வரும் 30 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதாக அவரே எங்களை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அன்றைக்கு முதல்வர் வரும்போது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.முதல்வர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வரும் போது புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். அதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகளும் வழங்க ஒருங்கிணைப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.


முதல்வர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்து சென்ற பிறகு இன்னும் அதிக அளவில் இந்த மாவட்டம் வளர்ச்சி பெறும். கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில்  பயன்படுத்த முடியாத பள்ளிக் கட்டிங்கள் இடிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலி சம்பவத்தை தொடர்ந்து இது விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சேதமான கட்டிடங்கள் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி கட்டிடங்கள் பராமரிக்க அதற்கான நிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக 75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அது 250 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் தேவைப்படும் பட்சத்தில் நபார்டு வங்கி மூலம் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




சென்னையில் பாலியல் தொல்லையால் ஒரு பள்ளி மாணவி  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தயவு செய்து இது மாதிரியான விபரீத செயலில் மாணவிகள் ஈடுபட வேண்டாம். உங்கள் பிரச்சனையை மனம் விட்டு பேசுங்கள். நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்றார். நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், எம்எல்ஏ துரைசந்திரசேகரன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.