தஞ்சாவூர்: வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூரை சேர்ந்த ஜீவரத்தினம், ராம்கி, தமிழ்ச்செல்வன், இசைவாணன், நிஷாந்த், சிவா மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா ஏருந்தவாடி பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத்திடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த சதீஸ்வரன் என்பவர் எங்களுக்கு நண்பர்கள் வாயிலாக அறிமுகமானார். இவர் சிங்கப்பூர், நியூசிலாந்து உட்பட வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதே போல் பலருக்கு வேலை வாங்கி தந்துள்ளேன். இன்னும் பலருக்கு வேலை வாங்கி தருவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார். இவரது பேச்சை நம்பி நாங்கள் லட்சக்கணக்கில் அவரிடம் பணம் கொடுத்தோம். அந்த வகையில் ஜீவரத்தினம் ரூ.6.50 லட்சம், மோகன்தாஸ் ரூ.3.2 | லட்சம், ராம்கி ரூ.1.70 லட்சம், இசைவாணன் ரூ.2.40 லட்சம், தமிழ்ச்செல்வன் ரூ.1 லட்சம், நிஷாந்த் மற்றும் சிவா ரூ.2.03 லட்சம் பணத்தை பல தவணைகளில் சதீஸ்வரனுக்கு வழங்கினோம்.
பல மாதங்கள் கடந்த நிலையிலும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் அவரிடம் தொடர்ந்து நாங்கள் ஏன் இன்னும் வெளிநாட்டிற்கு அனுப்பாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டபோது போலி விசா, வொர்க் பர்மிட் போன்றவற்றை காண்பித்தார். இதை நம்பி நாங்களும் காத்திருந்தோம். ஆனால் அவர் காண்பித்தவை போலி ஆவணங்கள் என்பது தெரிய வந்தது.
இது குறித்து சதீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போது அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது மேலும் அவரது மனைவியின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தலைமறைவாக உள்ளனர் எனத் தெரிய வருகிறது. லட்சக்கணக்கில் எங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த சதீஸ்வரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியில் இருந்து கடன் வாங்கியும் நகைகள் மற்றும் வாகனங்களை அடமானம் வைத்து இந்த பணத்தை நாங்கள் கொடுத்துள்ளோம்.
இதனால் நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு சதீஸ்வரனிடமிருந்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும். இதேபோல் அவர் தஞ்சை உட்பட பல பகுதிகளை சேர்ந்தவரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார் எனவும் தெரிய வருகிறது. இவ்வாறு மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று வெளிநாட்டு வேலை என்று கூறி பணம் மோசடி செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் ஏமாந்து விடுகின்றனர். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் வெளிநாட்டு வேலையை எதிர்பார்த்து இப்படி மோசடி நபர்களிடம் சிக்கி கொள்கின்றனர். இதனால் கடன்பட்டு அந்த கடனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பெரும் அவதியடைகின்றனர். இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.