தஞ்சாவூர்: தஞ்சாவூரில் முன்னாள் எம்பியின் வீட்டில் 87 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளை நடந்த வீடு அமைந்துள்ள பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பதிவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Continues below advertisement

திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்தவர் ஏகேஎஸ் விஜயன். இவர் நாகை நாடாளுமன்ற தொகுதியில் 1999,2004,2009 ஆகிய மூன்று முறை  போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக விவசாய அணியின் மாநில செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சேகரன் நகரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது மனைவியும், மகளும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த நவ.28-ம் தேதி இரவு ஏகேஎஸ்.விஜயனின் மனைவி ஜோதிமணி தனது மகளை அழைத்துக் கொண்டு சித்தமல்லியில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை ஏகேஎஸ்.விஜயன் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் தஞ்சாவூரில் உள்ள வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Continues below advertisement

உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் இருந்த 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. உடன் இதுகுறித்து ஏகேஎஸ்.விஜயன் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

மேலும் சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம், வல்லம் டிஎஸ்பி காயத்ரி, இன்ஸ்பெக்டர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வெ.சந்திரா, தாலுகா சோமசுந்தரம், வல்லம் முத்துக்குமார் மற்றும் எஸ்.ஐ., அருள் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படையில் அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் உதவியோடு,  போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.