மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் அடுத்த கொள்ளிட ஆற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளது காடுவெட்டி கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் இன மக்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வெள்ளை மணல் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்று புறம்போக்கு நிலத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர்.
மேலும், அந்த இடத்திற்கு பல ஆண்டுகளாக வரி செலுத்தியும் வந்துள்ளனர். காலப்போக்கில் அந்த நிலத்திற்கு வரி வசூல் செய்வதை அரசு நிறுத்தி விட்டதாகவும், தற்போது கடந்த சில ஆண்டுகளாக தங்களை அப்பகுதியில் விவசாயம் செய்ய வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்காமல், விவசாயம் செய்ய செல்லும் எங்களை அடித்து விரட்டி, துன்புறுத்துவது மட்டுமின்றி எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வது மட்டுமல்லாமல் அந்த இடம் தொடர்பாக எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டு காலி செய்யுமாறு கூறி பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகின்றன.
இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கும், முதல்வரின் தனி பிரிவு என பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டும், எங்களுக்கு எந்த தீர்வும் ஏற்படவில்லை என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி ஏழை விவசாய குடும்பத்தினர். தமிழக முதல்வர் இதனை கவனத்தில் எடுத்து தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வந்த எங்களுக்கு அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் நேரில் சென்று அவர்கள் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் செய்தியாளரிடம் கூறுகையில்: ஏழை எளிய நிலமற்ற கூலி தொழிலாளர்கள் பல்லாண்டு காலமாக பயன்படுத்தி வந்த விவசாய நிலத்தில் அவர்களை விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வனத்துறை அதிகாரிகள் விரட்டி எடுப்பது கண்டனத்திற்குரியது என்றும் இதனை உடனடியாக அரசு தலையிட்டு அவர்களுக்கு மீண்டும் அந்த நிலங்களை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, முழு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் பேரணி!
மயிலாடுதுறையில் இயற்கை விவசாயி நம்மாழ்வார் நினைவு நாளையொட்டி காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் சங்கத்தலைவர் குருகோபிகணேசன் தலைமையில் கோரிக்கை கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. பேரணி மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே தொடங்கி சின்னக்கடைத்தெருவில் முடிவடைந்து, பேரணியில் 300 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.
தொடர்ந்து கோரிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து முழு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் முழு பாதிப்பிற்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், பகுதி பாதிப்பிற்கு ஏக்கருக்கு 15 ஆயிரமும் ரூபாயும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.