கும்பகோணத்தில் உள்ள தஞ்சை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நாகை, திருவாரூர், அரியலுார், ஜெயங்கொண்டம், கடலுார் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலிருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதில் 500 க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் இருந்து வருகின்றனா். கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவு, 24 மணி நேர தாய்சேய் நலபிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, எலும்பு முறிவு பிரிவு, கண், பல், பால்வினை நோய் பிரிவு, ரத்தவங்கி, தீப்புண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு தனித்தனியாக சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.மாதந்தோறும் 200 சிசேரியன் அறுவை சிகிச்சையும், சுமார் 350 இதர பொது அறுவை சிகிச்சையும், மாதத்திற்கு சுமார் 50 பிரேத பரிசோதனையும் நடைபெற்று வந்தது.




இம்மருத்துவமனையிலுள்ள உள்நோயாளிகளுக்கு காலை மதியம், இரவு நேரங்களில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு வரும்  பெரும்பாலானோர், ஏழை எளிய கூலி விவசாய தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருவதால், அவர்கள் மருத்துவமனையில் வழங்கும் உணவை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உணவு வழங்கும் வாகனம் துரு பிடித்தும், தள்ள முடியாமல் பார்ப்பதற்கே அருவருக்கத்தக்க நிலையில் இருந்தது. இதனையறிந்த மருத்துவத்துறை நிர்வாகம், உடனடியாக ஸ்டீலான வாகனத்தை தயாரித்து வழங்கினர்.


இந்நிலையில், கும்பகோணம் அரசு மருத்துவமனையினை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், திடிரென பார்வையிட்டு ஆய்வு செய்தார. அப்போது, வார்டுகள் சுத்தமாக உள்ளதா, சுகாதார வளாகம், நோயாளிகள் இருக்கும் பகுதிகள், நோயாளிகளின் உறவினர்கள் ஒய்வெடுக்கும் பகுதிகள் பாதுகாப்பாக இருக்கின்றதா, கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். அப்போது, கிராமத்தை சேர்ந்த சிறுவன், தனது பாட்டிக்கு, மருத்துவமனையில் வழங்கிய உணவை தட்டில் எடுத்து கொண்டு சென்றான்.இதனையறிந்த எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், அச்சிறுவனை அழைத்து விசாரித்தார். அச்சிறுவன், தான் திருவிடைமருதுார் பகுதி கிராமத்திலுள்ள, விவசாய குடும்பத்தை  சேர்ந்தவன் என்றும், தனது பாட்டி வயது முதிர்வு காரணமாக உடல் நலமின்றி,வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்காக மதியம் உணவை வாங்கி செல்கிறேன் என்றான்.




உடனே எம்எல்ஏ, காலை மதியம் இரவு நேரங்களில் உணவு சரியான நேரத்தில் தரமாக வழங்குகிறார்களா, சுகாதாரமாகவும், ருசியாக உள்ளதா, உனது பாட்டில் இச்சாப்பாட்டை சாப்பிடுகிறார்களா என்று கேட்டார். தொடர்ந்து, சிறுவன் தட்டிலிருந்த சாம்பார் சாதம் மற்றும் பொறியலை, கையில் எடுத்து, நுகர்ந்து பார்த்து, வாயில் போட்டு சாப்பிட்டு பார்த்தார். இதனையறிந்த மருத்துவமனையில் உள்ளவர்கள், நோயாளிகளுக்கு வழங்கும் உணவை, பெரும்பாலானோர் சாப்பிடாமல் கடைகளில் வாங்கி கொடுக்கும் நிலையில், நோயாளிக்கு சென்ற சாப்பாட்டை, சாப்பிட்டு தரம் பார்த்த எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.