தமிழகத்தில்  61 நாள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. கடலில் மீன்வளம் பெருக அரசின் உத்தரவை ஏற்று நாகை மாவட்டத்தில் 27 மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளை அந்தந்த கிராம துறைமுகப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநில  மீனவர்களுக்கு 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்கத்தடை விதிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த மீன்பிடி தடைகாலம் இன்று 15 தேதி அதிகாலை முதல் அமலுக்கு வருவதால், நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், கோடியக்கரை, நம்பியார் நகர், நாகூர், புஷ்பவனம், ஆற்காட்டுதுறை, வேதாரணியம் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் தங்களது விசைப்படகுகள் அனைத்தும் ஆங்காங்கே உள்ள துறைமுகங்களில் கட்டி பாதுகாப்பாக  நிறுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



 

மேலும் 61 நாட்கள் வரை மீன்பிடிக்க செல்லாததால், படகிலுள்ள வலைகள் மற்றும், மீன்பிடி உபகரணங்களை மீனவர்கள் பத்திரபடுத்தி பாதுகாக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லாத நிலையில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள அவர்கள் ஒரு சில மீனவர்கள் மட்டுமே சிறிய வகை படகில் கரைப்பாடு எனப்படும் அதிகாலை சென்று காலை 7 மணிக்கு கரை திரும்பும் தொழிலுக்கு கூட்டாக செல்லும் அவர்களுக்கு நூறு ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என கவலை தெரிவிக்கின்றனர்.

 

மீனவர்கள் மீன்பிடி தடைகாலங்களில் அரசு மீனவ குடும்பத்திற்கு வழங்கும் தடைக்கானல் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் மீன்பிடித் தொழிலை சார்ந்த தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும், ஆயிரம் விசைப்படகுகளுக்கு மேல் உள்ளதால் 

விசைப்படகுகளை பழுது நீக்கம் செய்ய மீன்துறையில் உரிமம் பெற்ற பெரிய விசைப்படகுகளுக்கு ரூ. 5 லட்சம்,சிறிய விசைப்படகுகளுக்கு ரூ. 3 லட்சம் மான்யத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். இதனால் நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் குடும்பங்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கின்றனர்.



 

இதே போல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில்  கடலில் மீன்வளத்தை பெருக்கும் நோக்குடன், மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்து வருகின்றன.  மீன்பிடி தடைகாலம் இன்று முதல் அமலுக்கு வந்ததையொட்டி காரைக்காலில் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, கோட்டுச்சேரி மேடு ,மண்டபத்தூர் உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி, கட்டி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் 61 நாட்களும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மீனவர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்பதால் அவர்களுக்கு  தடைக்கால நிவாரணம், தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீர் செய்வதற்கான தொகையையும் புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு வழங்குகிறது. தடைகால நிவாரணம் மற்றும் விசைப்படகுகளை சீர் செய்யும் தொகையையும் தடை காலத்திலேயே வழங்க வேண்டும் எனவும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தடைக்காலத்தில் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நேரத்திலேயே காரைக்கால் துறைமுகத்தின் முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.