நீடாமங்கலம் அருகே நகர் கிராமத்தில் வயல்வெளியில் தண்ணீர் எடுக்க சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா எருமைப்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மீனா. இன்று காலை நீடாமங்கலம் அருகே நகர் கிராமத்தில்  விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில் வேலை செய்யும் ஆட்களுக்கு குடிநீர் தேவைக்காக மீனா அருகில் உள்ள போர் செட்டிற்கு சென்றுள்ளார். 

 

அங்கு மின் கம்பி அறுந்து தண்ணீரில் கிடந்துள்ளது. இதனை அறியாத மீனா தண்ணீர் பிடிப்பதற்காக நீர் தேங்கிய பள்ளமான பகுதியில் இறங்கிய போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். நீண்ட நேரம் ஆகியும் தண்ணீர் எடுக்க சென்ற பெண் வராததால் சந்தேகம் அடைந்த விவசாய தொழிலாளர்கள் போர் செட்டிற்கு சென்று பார்த்தபோது மீனா உயிரிழந்து நீரில் மிதப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

 

இதுகுறித்து அருகில் இருந்த தொழிலாளர்கள் நீடாமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நீடாமங்கலம் போலீசார் உயிரிழந்த மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் செல்கின்றன இதன் காரணமாக விவசாய வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் தலையில் இடிக்கும் அளவிற்கு இந்த மின்கம்பிகள் செல்வதால் எந்த நேரமும் மிகப்பெரிய அளவில் விபத்தை ஏற்படலாம் என்ற அச்சம் விவசாய கூலித் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ளது

 

இந்த நிலையில் நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாய நிலங்களில் தாழ்வாக மின் கம்பிகள் செல்வதாகவும் பலமுறை மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று ஒரு உயிர் நம்மை விட்டு பிரிந்து இருக்கிறது இனிவரும் காலங்களில் எந்த உயிரும் போகாமல் இருக்கும் முன்னரே மின்வாரிய அதிகாரிகள் விழித்துக் கொண்டு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.