கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் கண்கள் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர்பலி எண்ணிக்கையும் பெருகிவரும் நிலையில், சமீபகாலமாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என உயிர்க்கொல்லி நோய் தொற்றுகளால் மனிதகுலத்திற்கு பேராபத்து நிலவி வருகிறது.



ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 614  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 711 ஆக அதிகரித்து உள்ளது.  மேலும் 19597 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம் மருத்துவமனைகளில் தற்போது 4817 பேர் தொடர்ந்து தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரேநாளில் மட்டும் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் மொத்தம் 297 பேர் உயிரிழந்து உள்ளனர்.


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (45) சீர்காழி கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 12-ஆம் தேதி மீனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். குணமடைந்து வீடு திரும்பிய 6 நாள்கள் கழித்து மீனாவுக்கு இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் மீனாவுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கடந்த மே 14-ஆம் தேதி அவரது இடது கண் மற்றும் மேலண்ணத்தில் சில பகுதிகள் அகற்றப்பட்டு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை நோய் உள்ள மீனாவுக்கு ஷீராய்டு ஊசி செலுத்தப்பட்டதால் ஒவ்வாமையால் இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வை இல்லாமல் போனதாக வேதனை தெரிவித்த உறவினர்கள் மேலும் தொடர் சிகிச்சை அளிக்க பணமில்லாமல் தவிப்பதாகவும், அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். 



இந்நிலையில், மீனா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மீனாவின் உடலை உறவினர்கள் மயிலாடுதுறைக்கு எடுத்துவந்து இன்று காலை தகனம் செய்தனர். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியின் முதல் கருப்பு பூஞ்சை உயிரிழப்பு இதுவாகும்.