ராஜஸ்தானில் பெண் மருத்துவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் அர்ச்சனா சர்மா  நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அர்ச்சனா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இன்று இந்திய மருத்துவ கழகம் சார்பில் நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 200 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மருத்துவர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட அர்ச்சனா சர்மா குடும்பத்தினருக்கு உரிய நிதி வழங்க வேண்டும், மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கையான மருத்துவர்களை வன்முறையில் இருந்து பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும், மருத்துவர்களை குற்றவாளியாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்பீடு கேட்கும் வழக்குகளில் இருந்து மருத்துவத்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 




 


மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் திரும்பிச் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சை போன்ற உயிர்காக்கும் சிகிச்சைகளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மேற் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். 




இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க மயிலாடுதுறை கிளைத்தலைவர்  மருத்துவர் பாரதிதாசன் கூறுகையில், பல ஆண்டுகளாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், மருத்துவர்கள் மீதான தாக்குதல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மருத்துவரை தற்கொலைக்கு தூண்டிய காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடக்காமல் இருக்கும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.