தமிழகம் முழுவதும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மேனாங்குடியில் உள்ள சீத்தளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. தீமிதி திருவிழா முடிந்தவுடன்  ஆர்கெஸ்ட்ரா நடைபெற்றது. இந்த விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெற்றாமல் இருக்க பேரளம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது இளைஞர்கள் கூட்டம் மது போதையில் பாடலை கேட்டு  ஒருவருக்கொருவர் தள்ளிவிட்டு நடனமாடினர்.



 

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் குமரவேல் என்பவர் மது போதையில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டிருந்த இளைஞர்களை தரையில் அமர்ந்து பாருங்க என கூறி உள்ளார். அதனை அடுத்து பாலூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் மணிகண்டன் (28) என்பவர் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து காவலர் குமரவேல் தலையில் அடித்துள்ளார். இதில் கண்ணம் கிழிந்து ரத்தம் சொட்டிய காவலர் குமரவேலை காவல்துறையினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு காவலர் குமரவேலுக்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை மதுபோதையில் இளைஞர் பீர் பாட்டிலால் தலையில் தாக்கிய சம்பவம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



 

இந்தநிலையில் பீர் பாட்டிலால் தன்னை குத்திய நிலையிலும் அந்த காவலர் தன்னை பீர் பாட்டிலால் குத்திய இளைஞரை பிடித்து சக காவலர்களிடம் ஒப்படைத்துள்ளார் அதனை அடுத்து பேரளம் காவல் நிலையத்திற்கு மணிகண்டனை அழைத்து சென்று அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பேரளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேரளம் காவல் நிலைய வளாகத்தில் கொடுத்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இளைஞர் ஒருவர் மண்ணெண்ணையை ஊற்றிக் தீ வைத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அதேபோன்று பேரளம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் கைதி தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரை மீண்டும் பிடித்து சிறையில் அடுத்த சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது காவலரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.