திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட செருவாமணி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் சௌந்தர்ராஜன் முத்துலட்சுமி தம்பதியினர். சௌந்தர்ராஜன் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நான்கு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களது மூன்றாவது மகன் மணிகண்டன் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மலேசியா சென்றுள்ளார். இவர் நாகையில் டிப்ளோமா இசியி முடித்துள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக இவர் மலேசியா சிங்கப்பூர் எல்லையான ஜோபார்டனில் வாட்டர் சர்வீஸ் கம்பெனியில் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து சென்ற மணிகண்டன் வீடு கட்டி விட்டு கார் வாங்கிவிட்டு தான் ஊருக்கு வருவேன் என்று கூறி கடந்த ஆறு வருடங்களாக மலேசியாவிலேயே தங்கி பணிபுரிந்து வருவதாகவும் வீட்டிற்கு இதுவரை வந்ததில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடைசியாக கடந்த 27.07.2023 அன்று 11 மணி வரை வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தனது அண்ணன் ஐயப்பனுக்கு அழைத்து குடும்பத்தில் உள்ள அனைவருடன் மணிகண்டன் பேசி உள்ளார். இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரவு மலேசியாவில் உள்ள தமிழரான ஆம்புலன்ஸ் டிரைவர் பென்னி என்பவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மணிகண்டன் விபத்தில் சிக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த இளைஞர் மணிகண்டன் குடும்பத்தினரிடம் கூறியதும் அவரது அண்ணன் ஐயப்பன் மணிகண்டன் மலேசியாவில் வழக்கமாக உணவருந்தும் உணவகத்தில் உள்ளவரிடம் கேட்டபொழுது அவரும் அந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அந்த நபர் இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியாது நானும் மலேசியாவிற்கு வேலைக்கு தான் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். மணிகண்டனின் உரிமையாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அதேபோன்று மணிகண்டன் எண்ணிற்கு தொடர்பு கொண்டாலும் ரிங் மட்டும் போவதாகவும் கால் கட்டாவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து மணிகண்டனின் தந்தை சௌந்தரராஜன் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட கிராமத்தினர் பத்துக்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விபத்தில் சிக்கிய தங்களது மகனை மீட்டு தர வேண்டுமென மனு அளித்தனர். மேலும் தந்தைக்கு தனது மகனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிக்காமல் உறவினர்கள் மனு கொடுக்க அழைத்து வந்தனர். அது தெரிந்ததும் தந்தை கண்ணீர் விட்டு அழுதார்.
மேலும் மாதா மாதம் சரியாக மணிகண்டன் மலேசியாவில் இருந்து பணம் அனுப்பி வந்தார் என்றும் அதை வைத்து புதிதாக வீடு கட்டி தற்போது வீடு முடியும் தருவாயில் உள்ளதாகவும் இந்த நிலையில் அவர் விபத்து ஏற்பட்டு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என கண்டறிய முடியாத நிலையில் அவரது தந்தை தற்போது மாவட்ட ஆட்சியரிடம் தனது மகனை மீட்டுத் தரக்கோரி புகார் அளிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்