திருவாரூர் மாவட்டம் கொருக்கையில் செயல்படும் அரசு கால்நடைப் பண்ணையில் உம்பளச்சேரி இன நாட்டு மாடுகள் விற்பனையில் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த வகை மாடுகளை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து கொண்டு ஒரு விவசாயிக்கு ஒரு காளை கன்று ஒரு பசுங்கன்று வழங்கப்படுகிறது இந்த வகை நாட்டு மாடுகளை வாங்குவதற்கு தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், தர்மபுரி, புதுக்கோட்டை, மதுரை உட்பட தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் ஆர்வமாக முன்பதிவு செய்து வைத்துள்ளனர்



 

ஆண்டுக்கு சுமார் 200 கன்று குட்டிகள் வரை இந்தப் பண்ணையில் இருந்து விவசாயிகள் வாங்கி சென்ற நிலையில் கடந்த மூன்றாண்டு காலமாக ஒரு கன்று குட்டிகள் கூட விற்பனையாகவில்லை இதற்கு அடிப்படைக்காரணம் வயது அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த கன்றுக்குட்டிகள் தற்போது ஒரு கிலோ 250 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன இதன் காரணமாக சுமார் 3,000 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த கன்றுக்குட்டிகள் 12 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை ஏற்றம் கண்டுள்ளது இதனை விலை கொடுத்து வாங்க முடியாமல் பதிவு செய்த விவசாயிகள் விலையைக் கேட்டு விட்டு திரும்பிச் செல்கிறார்கள் இதேபோன்று கிடேரி கன்று குட்டியை ஒரு வயதுக்குள் இருந்தால் அதன் விலை 15 ஆயிரம் ரூபாய் எனவும் ஒரு வயதிற்கு மேல் இருந்தால் 20 ஆயிரம் ரூபாய் எனவும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது இதனால் கால்நடைகளை வாங்காமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்

 

இந்த வகை நாட்டு மாடுகளில் இருந்து வரும் பாலுக்கு சமீபகாலமாக நல்ல வரவேற்பு உள்ளது அதுபோல் இந்த வகை மாடுகளை விவசாயிகளுக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு மற்றும் வளர்ப்பிற்கும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்று வளர்த்து வருகிறார்கள் இதனால் உம்பளச்சேரி நாட்டு மாடுகள் உற்பத்தி அதிகரித்து பெருகி வந்த நிலையில் அரசின் இந்த கொள்கை முடிவால் ஒரு கன்றுக்குட்டி கூட விற்பனையாகாமல் நாட்டு மாடு விற்பனை முடங்கிப் போயுள்ளது



இதுகுறித்து மாடு வளர்ப்போர் கூறியதாவது...

 

உம்பளச்சேரி கால்நடை நல்ல தரமான நாட்டு இன வகை கால்நடைகள் ஆகும் இதனை 6 மாதம் முதல் 3 வயதுக்குள் சுமார் அதிகபட்சம் 3000 ரூபாய் விலை கொடுத்து வாங்கி வந்த நிலையில் தற்போது இந்த கன்றுகள் வளர்ந்தவுடன் என்ன பலனை தருமோ அத்தகைய விலையை முன்கூட்டியே நிர்ணயித்து அரசு விற்பனை செய்கிறது. உணவுக்காக பயன்படுத்தப்படும் ஆடுகளை கூட எடை வைத்து விற்காத நிலையில் விவசாயிகளுக்கு உதவும் உழவு மாடுகளை எடை வைத்து விற்பனை செய்வது பாவம் என்பதோடு கூடுதல் விலை கொடுக்க முடியாததால் விவசாயிகள் வாங்க முடியாத நிலையை உருவாக்கி இந்த மாட்டு இனங்களை அளிப்பதற்கான முன்னோட்டமாக கொருக்கை அரசு மாட்டுப்பண்ணையின் விலை நிர்ணயக் கொள்கை உள்ளது எனவே தமிழக அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த வயது அடிப்படையிலான விலையில் கன்றுக் குட்டிகளை விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அரசின் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் தமிழகத்தில் நாட்டு இன மாடுகள் என்பதே வருங்காலங்களில் அழிந்துபோகும் நிலை உருவாகும் அதற்கு தற்போதைய புதிய அரசு விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கிறோம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.