பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில்  2016-2017 ஆம் ஆண்டுக்கான மத்திய கால மறு மாற்றுக்கடன்  சுமார் 420 கோடி தள்ளுபடியை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி விவசாயிகள், கையில் பதாதைகள் ஏந்தி, நெற்பயிற்களுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம்,காந்திபூங்கா அருகில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விவசாயி முருகேசன் தலைமை வகித்தார். வரதராஜன், சாமிநாதன், ஆதி கலியபெருமாள் உள்ளிட்ட சுமார் 50க்கும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில், பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில்  2016-2017 மத்திய கால மறுமாற்றுக்கடன்  சுமார் ரூ.420 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர்   சுந்தர விமல்நாதன்  கூறுகையில், கடந்த 2016-2017ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் விவசாயிகள் பெற்றிருந்த பயிர்கடன் சுமார் 420 கோடியை அப்போது ஏற்பட்ட கடுமையான வறட்சி, அதை தொடர்ந்து ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பு போன்ற இயற்கை இடர்பாடுகளால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.


அப்போது குறுகிய கால கடனாக வழங்கப்பட்ட நிலையில், அதை தமிழக அரசு மத்திய கால மறுமாற்று கடனாக அறிவித்தது. அதனை 3 தவணையாக செலுத்தவும் உத்தரவிட்டது. ஆனால் பல விவசாயிகள் வறட்சி மற்றும் கஜா புயல் காரணமாக செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகஅரசு அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் தள்ளுபடி தொடர்பாக வெளியிட்ட அரசானையில், மத்திய கால மறுமாற்றுக்கடன் பெற்ற விவசாயிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. அப்போது, விடுபட்ட அந்த விவசாயிகளின் கடன்களையும் பாரபட்சமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.


இந்நிலையில், புதியதாக திமுக அரசு பெறுப்பேற்ற நிலையில், தஞ்சாவூர் மற்றும் சென்னையில் வேளாண் தனி பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் இதுதொடர்பாக கோரிக்கை வைத்தோம். ஆனால் வேளாண் தனி பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.


எனவே, மத்திய கால மறுமாற்று கடன் தொகை 420 கோடியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், 2021 ஜனவரி 31ஆம் தேதி வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி என்ற அறிவிப்பை மாற்றி, 2021 மார்ச் 31ஆம் தேதி வரை கடன் பெற்ற விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர், நில உடமை, தள்ளுபடி செய்யப்பட்ட தொகையின் விபரங்களை, அனைவரும் தெரிந்துக்கொள்ளும் விதமாக இணையதளம், கிராம நிர்வாக அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் ஒட்டவேண்டும்.


இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கடன் தள்ளுபடி குறித்த அரசானை வெளியாகி 200 நாட்களை கடந்த நிலையில், இதுவரை வெளிப்படைதன்மையாக கூட்டுறவுதுறை பயனாளிகளின் விபரங்களை வெளியிடாமல் இருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, மத்திய கால மறுமாற்று கடனை பாகுபாடின்றி தள்ளுபடி செய்திட சட்டமன்ற கூட்டத்தில் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில் விதி 110 ன் கீழ் அறிவித்து அரசானை வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில், தமிழக அரசு மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றார்.