தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி குப்பை கிடங்கு, ஒன்பத்துவேலி கிராமம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ளது. இப்பகுதிக்கு சிலர் சென்ற போது அங்கு மனித மண்டை ஓடுகள் மற்றும் மனித உறுப்புகளை பார்த்த பொது மக்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு பின்னர் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில், மனித மண்டை ஓடுகள் மற்றும் மனித உறுப்புகள் கிடந்தது. இதனால் போலீசாருக்கும், கிராம அலுவலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்குள் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.
இது குறித்து விசாரித்த போது திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்கூடம் பழுதடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. முன்புறக்கதவு உடைந்து விட்ட நிலையில் கட்டிடம் இடித்து அப்புறப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அடையாளம் தெரியாத அனாதை பிரேதங்களை பிரேத பரிசோதனை முடித்து வழக்கு முடிவு செய்யப்படும் வரையில் மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித உறுப்புகள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும். தற்போது கட்டிடம் இடித்து அகற்ற உள்ளதாலும், வழக்குகளும் முடிவடைந்து விட்டதால் அவைகளை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளரிடம் தெரிவித்து அப்புறப்படுத்தி, அதனை பாதுகாப்பாக புதைக்க அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
ஆனால், மனித மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித உறுப்புகள் அடங்கி அட்டை பெட்டிகளை பூமியில் புதைக்காமல், அலட்சியமாக குப்பை கிடங்கில் வீசி சென்றுள்ளனர். இதனை அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் அட்டை பெட்டியை கடித்து குதறி போட்டதால் மண்டை ஓடு உள்ளிட்டவை வெளியே தெரிந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், நிர்வாகத்தினர் அலட்சியமாக செயல்படுகிறார்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் நடமாட கூடிய இப்பகுதியில் இதுபோன்ற அதிர்ச்சி அளிக்ககூடிய வகையில் மண்டை ஒடுகள், எழும்புகள், மனித உறுப்புகளை வீசி எறிந்ததால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். தினந்தோறும் கொள்ளிடம் ஆற்றின் நீரை குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பல்வேறு உபயோகத்திற்காக பயன்படுத்தும் மக்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது.
இங்கு பத்து பேரில் உடல்களில் பல்வேறு பாகங்கள், மண்டை ஒடுகள், எழும்புகள் இருப்பதால், இவைகள் உண்மையிலேயே பிணவறையில் இருந்து வந்தது தான் என்பது கேள்வி குறியாகியுள்ளது. இறந்தவர்களின் பாகங்கள், அகற்றுவதற்கு என தனிவாகனம் மூலம், சேகரித்து அதனை, அதற்கென்றுள்ள இயந்திரம் மூலம் அகற்றுவார்கள். ஆனால் மருத்துவத்துறையினர், எந்த விதமான அக்கறையும் இல்லாமல், அலட்சியமாக செயல்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியதாகும், எனவே, மனித உடல்கள், மண்டை ஒடுகள், எழும்புகளை வீசி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.