​​Thanjavur : குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக தயாராகும் விவசாயிகள்.. பணிகள் தீவிரம்..!

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் குறுவை சாகுபடி பணிக்காக வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் அடைந்துள்ளனர்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் குறுவை சாகுபடி பணிக்காக வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் அடைந்துள்ளனர்.
 
டெல்டா பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடிதான் மேற்கொள்ளப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் குறுவை, சம்பா, தாளடி என்று விவசாயிகள் வெகு மும்முரம் அடைந்து விடுவர். ஒரு சில பகுதிகளில் கரும்பு, சோளம் போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் நெல்தான் பிரதான பயிராக உள்ளது. கடந்தாண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முன்னதாகவே தொடங்கினர். தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி, சித்திரக்குடி, ராமநாதபுரம், கரம்பை உட்பட பல பகுதிகளில் கடந்தாண்டு குறுவை சாகுபடி அமோகமாக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

மேலும் தஞ்சை மாவட்டத்தில் கடந்தாண்டு குறுவை சாகுபடி இலக்கை விஞ்சி அதிகளவில் நடந்தது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையில் 100 அடி வரை தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் குறுவை சாகுபடிக்காக கடந்தாண்டு போல் இந்தாண்டும் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. 

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது. இதை பயன்படுத்தி தற்போது தஞ்சை அருகே ஆலக்குடி பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக நிலத்தை உழும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு வயலை தயார்படுத்துவதால் மேட்டூரில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்பட்டாலும் குறுவை சாகுபடியை உடன் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால் வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் அடைந்துள்ளனர்.

வயல்களில் இருந்த களைகள் அப்புறப்படுத்தப்பட்டு டிராக்டரை கொண்டு ஆலக்குடி பகுதியில் உழவுப்பணி நடந்து வருகிறது. தண்ணீர் திறப்பதற்குள் இந்த பகுதியில் மற்ற விவசாயிகளும் வயலை உழும் பணியில் இறங்கி விடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

குறுவை சாகுபடிக்காக தற்போது வயலை உழுது சீராக்கி கொண்டால் நாற்று விட்டு நடும் பணிகள் விரைவாக தொடங்கி விடலாம் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது வயலை உழுவதால் வயல் சமமாகி மேடு பள்ளமின்றி இருக்கும்.  மேலும் நுண்ணுயிர்கள் பெருகி வயல் வளம் கூடும் களைகளும் மடங்கி மண்ணுக்கு உரமாகும் என்று தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வயல்களில் புல், பூண்டுகள் அதிகளவில் மண்டி உள்ளது. சில பகுதிகளில் மாடுகள், வெள்ளாடுகள் கிடை போடப்பட்டுள்ளது இருப்பினும் பெரும்பாலான பகுதியில் களைகள் மண்டிக்கிடப்பதாலும், இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணை திறக்கப்படும் என்பதாலும் தற்போது வயலை உழுது சாகுபடிக்காக தயார் செய்யும் பணிகளில் மும்முரமாக உள்ளோம் என்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola