3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவு.

 

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு உடனடியாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காக மகிளா நீதிமன்றம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டது. அதனை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள மகிளா நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது வழங்கப்பட்டு வருகிறது.

 

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை குறைக்கும் நோக்கத்தோடு இந்த நீதிமன்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளை மகிளா நீதிபதிகள் விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்கி வருகின்றனர்.



 

போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞருக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சேகரை கிராமத்தை சேர்ந்த விஜய் என்ற இளைஞர், கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த 3வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசரானையின் அடிப்படையில் சேகரையை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் விஜய் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 



 

வழக்கை விசாரித்த திருவாரூர் மகிளா நீதிமன்றம் குற்றவாளி விஜய்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்த்து அளித்ததுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து குற்றவாளி விஜய்யை திருவாரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளி விஜய்க்கு தண்டனை பெற்று தந்த மகளிர் காவல் துறையினரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டினார்.

 

மேலும் இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம், புகார் அளிப்பவர் பெயர் மற்றும் விலாசம் ஆகியவை ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் புகாருக்கு ஆளாக்கப்படும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்வார்கள், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.

 

போக்சோ சட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை பதிவாகியுள்ள வழக்குகள் குறித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.