சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்து காணப்படும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் எட்டுக்குடி முருகன் கோயில், திவ்ய தேசங்களில் ஒன்றான சௌந்தரராஜ பெருமாள் ஆலயம், மீனாட்சி அம்மன் கோவில் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட ஏராளமான வழிப்பாட்டு தளங்கள் உள்ளன. கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சென்னை காஞ்சிபுரம் திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயச்சார்பு இன்றி அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் செல்கின்றனர். 

 


 


கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள வழிபாட்டு தளங்களில் வார இறுதிநாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய நாகை மாவட்ட ஆட்சியர் தடைவிதித்துள்ளார். இந்த உத்தரவு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா முகப்பு கதவு மூடப்பட்டு அதிகாலை 3 மணிக்கு மூடப்பட்டது வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த யாத்திரிகர்கள் வாகனங்கள் மூலமாகவும் ரயில்கள் மூலமாகவும் சொந்த ஊர் புறப்பட்டனர். தடை உத்தரவு காரணமாக  பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் அலங்கார வாசல் வெறிச்சோடி காணப்பட்டது.


 


 

இதேபோல சிங்காரவேலன் ஆலயம், வெளிப்பாளையம் முத்து மாரியம்மன், நாகை நீலாயதாட்சி அம்மன் ஆலயம் சிக்கல் சிங்காரவேலர் ஒரு ஆலயம் எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளிட்ட இந்து வழிபாட்டு தளங்களும் பக்தர்களின்றி காணப்பட்டது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் முகப்பு கதவுகள் மூடப்பட்டு இருந்த போதிலும், மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர். எந்தவித கொரோனா அச்சமுமின்றி கடைத்தெரு, கடற்கரை, முடிகாணிக்கை செலுத்தும் இடம், பேராலய முகப்பு என பல்வேறு இடங்களில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 


 

ஆலயத்தின் முகப்பு கதவு மூடப்பட்டுள்ள நிலையிலும், ஏராளமான பக்தர்கள் முகப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாட்டு நடத்தி செல்கின்றனர். மேலும் வேளாங்கண்ணி கடற்கரையில் குளிப்பது ஆபத்து என பதாதைகள் வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அங்கு அனைத்து நாட்களிலும் குளித்து வருகின்றனர்.