தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம்  தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அணைகளில் நீர் திறக்கப்பட்டு பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் டெல்டா மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.




இதேபோன்று திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் நாளை திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில்  இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா  உத்தரவிட்டுள்ளார்.




மேலும் டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் நெற்பயிர்கள் பெருமளவு மழை நீரில் மூழ்கி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒன்றாக டெல்டா கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் சூழலில் இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.




இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தின் வடிகால் வாயாய்க்காலாக கண்ணபிராண்டி வடிகால் அமைந்துள்ளது. புத்தூர், திருமைலாடி, பண்ணங்குடி, தில்லைவிடங்கன், மாதானம் உள்ளிட்ட கிராமங்களின் விளைநிலங்களுக்கு பிரதான வடிகால் வாய்க்காலாக இது உள்ளது. இந்த வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததால் தற்போது விளை நிலங்களில் தேங்கிய மழைநீர் வடியாமல் 500 ஏக்கர் வரை சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கியுள்ளது. 




இந்நிலையில் பருவமழை தொடங்கி முதல் மழைக்கே இந்த நிலை என்றால் எஞ்சிய மழைக்காலத்தில் தண்ணீர் வடியாமல் மொத்த சாகுபடியும் பாதிக்கபடும் என கவலை  வேதனையடைத்துள்ள விவசாயிகள், அரசு நடவடிக்கை எடுக்கும் முன் தங்கள் கடன் பெற்று பயிரிட்ட பயிரை காப்பாற்ற கொட்டும் மழையிலும் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் நிரம்பிய வாய்க்காலில் உள்ள புதர்களை அறுத்து அப்புறபடுத்தி வருகின்றனர்.இதனால் விளை நிலத்தில் தேங்கி தண்ணீர் ஓரளவு வடியும் என எதிர்பார்த்துள்ள விவசாயிகள் வரும் காலத்திலாவது கண்ணபிராண்டி வடிகாலை முழுமையாக தூர்வார அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.