திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 49572 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மாவட்ட ஆட்சியர் தகவல். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 11 ஆயிரம் நபர்கள் கூடுதலாக தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

 

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி மாபெரும் முகாமை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு தடுப்பூசியை சுகாதாரத்துறை சார்பில் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இரண்டு மாபெரும் தடுப்பூசி முகாம் நிறைவு பெற்றுள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் 3-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மாபெரும் கொரோனா தடுப்பு முகாமில் 372 முகாம்களில் 49,572 நபர்கள் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு அரசு 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்களுக்கு அரசின் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள், மற்றும் பத்திரிக்கைகள் மூலமாகவும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள பல்வேறு விழிப்புணர்வு  நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டால் பொதுமக்கள் தங்களை தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை உதவியாக இந்த தடுப்பூசி அமையும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரத்துறை சார்பில் நேரடியாக சென்று அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி என்பது செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.



இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 372 முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. நேற்று ஒரே நாளில் 38 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் 49,572 நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 11 ஆயிரம் நபர்கள் கூடுதலாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாகவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம், அதேபோன்று நீடாமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் என பல்வேறு இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது பொதுமக்கள் அனைவருக்கும் முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன், மற்றும் திருவாரூர் வட்டாட்சியர் தனசேகரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.