தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சாமிப்பட்டியில் புடலங்காய் சாகுபடி அமோகமாக நடைபெற்று வருகிறது. நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


வெப்ப மண்டலப் பயிர் புடலங்காய்


புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் குறிப்பாக மணற்சாரி வண்டல் மண் சாகுபடிக்கு ஏற்றது. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம். ஜூன் – ஜூலை மாதங்களும், டிசம்பர் – ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி, கடலை சாகுபடி போல் காய்கறி சாகுபடியும் நடைபெற்று வருகிறது. 




நிலத்தை 4 முறை உழவு செய்ய வேண்டும்


இது குறித்து புடலங்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் தரப்பில்  கூறியதாவது: முதலில் நிலத்தை நன்றாக 3 அல்லது 4 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது 20 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். இந்த தொழு உரம்தான் செடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். தொழு உரத்தை இட்ட பின்னர் 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும்.


அந்த வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உழது தயாரான நிலத்தில் புடலங்காய் நன்கு வளர்ச்சி அடையும். நாங்க 200 குழி அரை ஏக்கரை விட கூடுதல் நிலத்தில்  புடலங்காய் சாகுபடி செய்துள்ளேன். இதற்கு 900 விதை தேவைப்பட்டது. விதையை 2 கிராம் பெவிஸ்டின் என்ற பூஞ்சாண மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.


களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்


ஒரு குழிக்கு 4 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாள்களில் முளைக்கத் தொடங்கிவிடும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 நாற்றுகளை மட்டும் விட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும். செடி நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். அடியுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும்.


மேலுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும். இதனால் செடிகள் வளர்ச்சி நன்கு இருக்கும். வேர்கள் வலுவாக நிலத்தில் பதியும். இதனால் காய்கள் நீண்டு வளரும். விதை ஊன்றியவுடன் பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். இதனால் செடிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து விடும்.


கொடிக்கு பந்தல் அமைப்பது முக்கியம்


அதிக தண்ணீர் இருக்க கூடாது. அதே நேரத்தில் தேவையான தண்ணீரும் குறைந்து விடக்கூடாது. இப்படி நிலத்தை உழுது, தொழு உரம் இட்டு, கொடி  வளர்ந்து வரும். அப்போது கொடிகள் நன்கு படர்ந்து வளர பந்தல் அமைப்பது அவசியம். விதை முளைத்து கொடி வரும்போது, கொடியை மூங்கில் குச்சியோ அல்லது மற்ற குச்சிகளை வைத்தோ ஊன்று கொடுத்து பந்தலில் படர விட வேண்டும். செடிகள் வளர்ந்து வரும் இடத்தில் கம்பி பந்தலும் பின்னர் வயல் முழுவதும் கொடி படர வலுவான கயிற்றால் பந்தல் அமைப்போம். வாரம் இரண்டு முறை களை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  


பழ ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள்


70வது நாளில் குழிக்கு, மட்கிய தொழு உரம் 1 கிலோ போட வேண்டும். இதனால் மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழ ஈயின் தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை பந்தலில் ஆங்காங்கே வைப்போம். இதனால் ஈக்கள் அதில் சிக்கிக் கொள்ளும். முழுமையாக இயற்கை உரமிடுவதால் காய்கள் நல்ல எடையுடன் வளரும்.
 
45 நாட்களில் சிவப்பு வண்டு, சாறு பூச்சி ஆகியவை தாக்குதல் இருக்கும். இதற்கு பஞ்சகவ்யா அல்லது இயற்கை பூச்சிக் கொல்லியை தெளிக்க வேண்டும். மேலும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி டினோகாப் அல்லது அரை கிராம் கார்பன்டாசிம் மருந்துகளில் ஒன்றை தெளிக்கலாம். அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் மாங்கோசெப் அல்லது குளோரோதலானில் மருந்துகளில் ஒன்றை 10 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.


70 நாட்களில் முதல் அறுவரை தொடங்கும்


விதை ஊன்றிய 70 நாள்கள் கழித்து முதல் அறுவடை தொடங்கும். ஒரு நாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்ய வேண்டும். காய்கள் பந்தலில் நன்கு நீண்டு வளரும். குறைந்தது வாரத்திற்கு 500 கிலோ வரை அறுவடை செய்யலாம். ஒரு கட்டுக்கு 40 காய்கள் அதாவது 45 கிலோ இருக்கும். புடலங்காயை பொறுத்தவரை விலை நிர்ணயம் என்பது சராசரியாக ரூ.30 முதல் ரூ.45 வரை இருக்கும். சரியான முறையில் பராமரிப்பு செய்தால் இன்னும் கூடுதலாக அறுவடை செய்யலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.