தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய மயிலாடுதுறை மாவட்டம் இங்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடப்பாண்டு ஜுன் மாதம் 12-ஆம் தேதி உரிய நேரத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி கடைமடை பகுதிவரை காவிரி தண்ணீர் சென்றுவிட்டதாக கூறி வருகின்றனர்.
ஆனால், குத்தாலம் அருகே காவிரி ஆற்றில் இருந்து பிரியும் முக்கிய பாசன ஆறான அய்யாவையனாறு வழியாக கொண்டல், கீழமருதாந்தநல்லூர், திருநன்றியூர், கீழையூர் வழியாக மீண்டும் காவிரி ஆற்றில் இணையக்கூடிய வகையில் அய்யாவையாறு உள்ளது. இந்த ஆற்றில் பல்வேறு பகுதிகளில் கரைகள் பலப்படுத்துவதற்கான தடுப்புச்சுவர்கள் பழுதடைந்த சட்ரஸ் சீரமைக்கும் பணிகள் 93 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து கரைகளில் பதிப்பதற்கான சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த ஆண்டுமுதல் கொற்கை கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அய்யாவையனாற்றில் பணிகள் முடிவடையாததால் தற்போது வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அய்யாவையனாற்றில் இருந்து பிரிந்துசெல்லும் பண்டாரவாடை வாய்க்கால், விக்ரமன் ஆறு, தலைஞாயிறு வாய்க்கால், வரகடை வாய்க்கால் உட்பட பல்வேறு கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் வருவதற்கு வழி இன்றி காணப்படுகின்றது. இதனால் திருமங்கலம், காளி, ஐவநல்லூர், கொற்கை, தாழஞ்சேரி, வரகடை, கள்ளிக்காடு, பாலாகுடி, வில்லியநல்லூர், கொண்டல், மருதாந்தநல்லூர், கங்கணம்புத்தூர், ஆனந்ததாண்டவபுரம், திருநன்றியூர் உள்பட அய்யாவையனாற்றை நம்பி பாசன வசதி பெரும் 50 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆற்றுநீர் எட்டிக்கூட பார்க்காத நிலை இருந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டமும் சரிந்துவருவதால் இப்பகுதிகளுக்கு குறுவைக்கு காவிரி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் வந்ததும், அய்யாவையனாறு உட்பட கிளை ஆறுகளில் தண்ணீர் திறந்துவிட்டிருந்தால் ஓரளவிற்கு நிலத்தடிநீர் மட்டும் குறையாமல் பம்பு செட் நீரை கொண்டு குறுவை சாகுபடி செய்தவர்களுக்கு கொஞ்சம் பயன் உள்ளதாக அமைந்திருக்கும். ஆனால், கரை பலப்படுத்துவது, சட்ரஸ் அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்காமல் கிடப்பில் போட்டதால் அய்யாவையனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறந்த பின்னரே தூர்வாரும் பணி, கரைபலப்படுத்துதல், சட்ரஸ் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வது பொதுப்பணித்துறையினரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தண்ணீர் வந்தால் பணிகளை அரைகுறையாக செய்துவிட்டு வேலை முடிந்ததாக கணக்குகாட்டி செல்வதும், இதன் மூலம் பெரிய அளவில் கொள்ளை நடைபெறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தனிகவனம் செலுத்தி அய்யாவையனாற்றில் கரை மற்றும் சட்ரஸ் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற