மணிகண்டன் நடித்த குட்நைட் படத்தில் இடம்பெற்ற மீதா ரகுநாத் கேரக்டரை கொண்ட பெண் வேண்டும் என சமீபகாலமாக ட்ரெண்டாகும் மீம்ஸ்களுக்கு நடிகை அனிதா சம்பத் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


வரவேற்பை பெற்ற குட் நைட் படம் 


கடந்த மே 12 ஆம் தேதி விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்செல் ரெபெக்கா, பாலாஜி சக்திவேல் என பலரின் நடிப்பில் வெளியான படம் “குட் நைட்”. மனிதர்களின் பெரும் தொல்லையாக காணப்படும் ‘குறட்டை’ பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் தியேட்டரில் வெளியாகி வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 


தொடர்ந்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல  ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக இணையத்தில் குட்நைட் படம் பற்றிய மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதில் மீதா ரகுநாத் நடித்த அனு கேரக்டரை குறிப்பிட்டு, “இந்த மாதிரி பெண் வாழ்க்கையில் இருந்தால் வாழ்க்கை அழகாக இருக்கும்” என சகட்டுமேனிக்கு மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறக்கின்றது. 


குட்நைட் படத்தின் அனுவின் கேரக்டர் அதிர்ந்து பேசாத, கணவர் சொல்வதை மட்டுமே கேட்கும் ஒரு அமைதியான பெண் என்ற அளவில் உருவாக்கப்பட்டிருக்கும். இப்படியான நிலையில் அனு மாதிரி பெண் வேண்டும் என கேட்பவர்களுக்கு நடிகை அனிதா சம்பத் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அனிதா சம்பத் பதிலடி


அந்த பதவில், “குட்நைட் அனு மாதிரி (மீதா ரகுநாத்) பொண்ணு வேணும்ன்னு நினைக்கிற அம்புட்டு பயலுகளும் கேடி பசங்க. ‘நான் என்ன பேசுனாலும் அவளோட விருப்பத்தை சொல்லாம, நாம சொல்றதை மட்டும் மூடிகிட்டு கேக்குற பொண்ணு வேணும்’ன்னு பெருசா சொல்றதுக்கு பதிலா, ‘அனு மாதிரி வேணும்’ன்னு சுருக்கமாக சொல்றாங்க. 


நாம அனு மாதிரி எல்லாம் இருக்க வேண்டாம் தங்கங்களே. நம்ம எதையும் சகித்துக் கொண்டு பண்ண வேண்டாம். நமக்கு பிடிச்சதை கேட்டு வாங்கிப்போம். நம்மளோட விருப்பத்தை வெளிப்படையாக சொல்லுவோம். நம்ம வாழ்க்கையை நாம் வாழ்வோம். பாய் ஃப்ரண்ட் அல்லது கணவருடன் நல்ல புரிந்து கொள்ளும் உறவில் இருப்போம்.நம் எண்ணத்தை வெளிப்படையாக பேசும் பெண்ணாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். 


அனு நல்ல பொண்ணு தான். அதுக்குன்னு எல்லா பொண்ணும் அனு மாதிரி அமைதியா இருந்த மட்டும் தான் நல்ல பொண்ணு கிடையாது. உங்களுடைய ஆண் நண்பர்கள் அனுவை போல இருக்க வேண்டும் என நினைத்தால் கவனமாக இருங்கள்” என அனிதா சம்பத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.