தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 1.96 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது விட்டு விட்டு பெய்து வரும் குறுவை பயிர்கள் வளர உதவும் என்ற விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை உட்பட டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிதான் முக்கிய பயிராக உள்ளது. ஒரு சில பகுதிகளில் கடலை, எள், உளுந்து, சோளம், கரும்பு, வாழை போன்றவை பயிரிடப்படுகின்றன. இருப்பினும் குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும் நெல் சாகுபடிதான் பிரதானமாக இருந்து வருகிறது. தற்போது காரீப் பருவ சாகுபடி முடிந்து அறுவடை பணிகள் நடந்து வருகிறது. மேலும் பல பகுதிகளில்  விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நேரடி நெல் விதைப்பு, நாற்று நடுதல், பாய் நாற்றங்கால், இயந்திரம் வாயிலாக நடவுப்பணி என விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தகுந்தவாறு குறுவை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நாற்றங்காலில் 30 நாட்களுக்கும் மேலாக வளர்ந்த நாற்றுக்களை பறித்து கட்டும் பணி மற்றும் களை எடுக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் முடித்துள்ளனர். தற்போது குறுவை பயிர்கள் நன்கு வளர்ந்து வருகிறது. இருப்பினும் ஆற்றில் வரும் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையும் அடைந்துள்ளனர். இதற்கிடையில் தஞ்சை மாவட்டத்தில் அவ்வபோது கனமழை பெய்து விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்து வருகிறது;

அந்த வகையில் நேற்று மாலை 5 மணியிலிருந்து தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் குளம், வாய்க்கால்களில் நீர் நிரம்பி வழிந்தது. இந்த மழை குறுவை பயிருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்தாண்டு தஞ்சை மாவட்ட அளவில் குறுவை சாகுபடி 1.96 லட்சம் ஏக்கரில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதில் தற்போது வரை 1.70 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி பணிகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது முறை வைத்து ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேவையான அளவு உரம் கையிருப்பு இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தரப்பிலும் தெரிவித்தனர்.
 
தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா 7.827 டன்னும், டி.ஏ.பி. 2.823 டன்னும், பொட்டாஷ் 1,858 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 3,694 டன் னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகள், தார் பாய்கள். ஜிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, பாபநாசம், சூரக்கோட்டை, மாரியம்மன் கோவில் அம்மாபேட்டை, சாலியமங்கலம், மெலட்டூர் உட்பட பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.