தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பசு மாட்டின் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பியபோது காம்பவுண்ட் சுவரில் மோதி நெஞ்சில் அடிப்பட்டு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பரிதாபமாக இறந்தார். இரவு நேரத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கிறது. எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.


தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (59).  குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே செல்ல பைக்கில் புறப்பட்டார். தஞ்சை மெடிக்கல் காலேஜ் ரோடு மூலிகைப் பண்ணை எதிரில் பைக்கில் தமிழ்ச்செல்வன் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்று சட்டென்று குறுக்கே புகுந்தது.

பசு மாடு மீது மோதாமல் இருக்க தமிழ்ச்செல்வன் பைக்கை திருப்பி உள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் அருகில் இருந்த காம்பவுண்ட் சுவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் நெஞ்சில் பலத்த காயமடைந்தார். உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி நடந்தது. பிடிபடும் மாடுகள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டன. அதன் உரிமையாளர்கள் மாடு ஒன்றுக்கு ரூ. 3000 யும், கன்றுகளுக்கு 1500 ரூபாயும் அபராதம் செலுத்திய பிறகு மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் மாடுகள் பிடித்து அபராதம் விதிக்கப்படுவதால் பாதிக்கப்படுகிறோம் எனக் கூறி பிப். 10்ம் தேதி 50-க்கும் மேற்பட்ட மாடுகளுடன் அவற்றின் உரிமையாளர்கள் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு அண்ணா சிலை அருகே திரண்டனர். பின்னர் அங்கு மாடுகளுடன் நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாடுகள் வளர்ப்பவர்கள் அதனை வீடுகளில் கட்டி வைப்பதில்லை. இதனால் மாடுகள் சர்வசாதாரணமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. தஞ்சை மாநகராட்சியில் எப்போதும் வாகனப் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக தஞ்சை பழைய பேருந்து நிலையம், ரயிலடி பகுதி, மேரீஸ் கார்னர், ராமநாதன் ஹாஸ்பிடல் ரவுண்டானா, மருத்துவக்கல்லூரி சாலை, ரெட்டிப்பாளையம் என்று எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

இப்படிப்பட்ட சாலைகளில் இரவு நேரங்களில் மாடுகள் மாநாடு நடத்துவது போல் கூட்டமாக சாலையிலேயே அமர்ந்து அசைப்போட்டு கொண்டு நகர்வதில்லை. தினமும் ஆயிரக்கணக்கில் பைக்குகள், கார்கள் சென்று வரும் சாலைகளில் சர்வசாதாரணமாக மாடுகள் வாகனங்கள் மத்தியில் புகுந்து ஓடுவதும் அடிக்கடி நடக்கிறது.

இதேபோல் வாகனங்கள் போக்குவரத்து அதிகம் உள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் சாலை முழுவதையும் அடைத்துக் கொண்டு மாடுகள் உட்கார்ந்து மாநாடு நடத்தாத குறைதான். மேலும் பல மாடுகள் தங்களுக்குள் முட்டிக் கொண்டு வாகனங்கள் மீது விழும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் பைக்குகளில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர். இதுபோன்றுதான் தற்போதைய விபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளில் சர்வ சுதந்திரமாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.