தஞ்சாவூா்: 165 ஆண்டில் அடியெடுத்து வைத்து இன்னும் நான் கம்பீரமானவன் என்று வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் தஞ்சாவூர் ரயில் நிலையம் புஜபலம் காட்டி வருகிறது.
தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்றாகும். தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 2-12-1861-ம் ஆண்டு தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது. திருச்சி-நாகை வழித்தடம், ஆங்கிலேயர்களின் வாணிப போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அப்போது இந்த வழித்தடம் அகல ரெயில்பாதையாக இருந்தது. பின்னர் மீட்டர்கேஜ் பாதையாக மாற்றப்பட்டது.
நாளுக்கு நாள் வளர்ந்த மக்கள் தொகை பெருக்கம், தொழில் முன்னேற்றம், வர்த்தக நிறுவனங்கள் அதிகரிப்பு, சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு என்று அப்டேட் ஆகிக் கொண்டே இருக்க... மீண்டும் அகல ரெயில் பாதையாக்கப்பட்டு இயங்கி வருகிறது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லவும் முக்கிய வழித்தடமாக தஞ்சைதான் முக்கிய வழித்தடமாக இருந்தது. தஞ்சை ரயில் நிலையத்தில் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுவதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும் 7 ரயில்வே பாதைகளும் இருக்கிறது. திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையங்களில் தஞ்சை ரயில் நிலையம் முதன்மையாக திகழ்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம்.
தஞ்சாவூரில் இருந்தும் தஞ்சாவூர் வழியாகவும் தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது . அதிக வருவாய் கொடுக்கக்கூடிய ரெயில் நிலையமாகும். நேற்றுடன் தஞ்சாவூர் ரெயில் நிலையம் தொடங்கி 164 ஆண்டுகள் முடிவடைந்து 165-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
இதனை கொண்டாடும் வகையில் நேற்று காவிரி டெல்டா ரெயில் பயணிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து ரெயில்வே நிலைய மேலாளர் முருகானந்தத்திற்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர். அப்போது வந்து நின்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கி வந்த ஓட்டுநரை கவுரவித்தனர். மேலும் ரெயிலில் இருந்து இறங்கிய அனைத்து பணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் காவிரி டெல்டா ரெயில் பயணிகள் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவகுமார், பொருளாளர் கண்ணன், பேராசிரியர் திருமேனி, வக்கீல்கள் உமர் முக்தர் ,பைசல், மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்க துணைத் தலைவர் மாறன், செயலாளர் கிரி, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், ரேவந்த் குமார் , பாபநாசம் ரெயில்வே சங்க தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.