பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொதுவிநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Continues below advertisement




இத்திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 21.09.2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அறிமுகத் திட்டமாக (Pilot Scheme) செறிவூட்டப்பட்ட அரிசியினைப் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்டு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு 3 நிலைகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஐனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்துள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக மத்திய அரசு தேர்வு செய்தது. அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.




மார்ச் 2024 –க்குள் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதார்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு முழுமையாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. மார்ச் 2024-க்குள் அனைத்து ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.




இரும்புச் சத்து மூலம் இரத்தச் சோகையைத் தடுக்கிறது,  ஃபோலிக் அமிலமானது கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திற்கும் உதவுகிறது, வைட்டமின் பி12 ஆனது நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரும்புச் சத்து, ஃபோலிக்அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணோட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கி ரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். 




இந்நிலையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் மரபணு மாற்றப்பட்ட கடுகை தடை செய்ய வேண்டும் என மயிலாடுதுறையில் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் தேசிய பாதுகாப்பு உணவு தினத்தை முன்னிட்டு அதனை உறுதிசெய்யும் வகையில் மண்ணையும், மக்களையும்  மடலாக்கும் மரபணு மாற்று கடுகிற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனைத்து விதமான களைகொல்லி மற்றும் பூச்சிகொல்லிகளை நாடு முழுவதும் தடைசெய்ய வேண்டும், செறிவூட்டபட்ட அரிசி திட்டத்தை திரும்ப  பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் தமிழ்நாடு அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




நலம்பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி பகுதிகளை சேர்ந்த திரளான விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வேண்டும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்,மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.