தஞ்சாவூர்: அழிந்து வரும் இனப் பாம்பு வகையான “மோதிர வளையன்” பாம்பு தஞ்சாவூரில் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர், கீழவாசல் ராயல்சிட்டி பகுதியை சேர்ந்த விஷ்வா. இவரது வீட்டில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில், பாம்பு ஒன்று இருப்பதாக அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விஷ்வா வீட்டிற்கு அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர், சதீஸ்குமார் தலைமையில், லோகநாதன், முத்துப்பாண்டி ஆகியோர் விரைந்து சென்று அங்கிருந்த பாம்பை பத்திரமாக மீட்டனர்.

Continues below advertisement

அந்த பாம்பு, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகவும் அரிதாகக் காணப்படும் மோதிர வளையன் எனப்படும் டிரிங்கெட் என்கிற இன பாம்பு என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சுமார் 100 செ.மீ., நீளம் உள்ள மோதிர வளையன் பாம்பை மீட்ட குழுவினர் தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனிக்கு தகவல் அளித்தனர்.

Continues below advertisement

அவர் உத்தரவின் பேரில், வனச்சரகர் ஜோதி குமாருடன், இணைந்து பாம்பை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர். இது குறித்து சதீஷ்குமார் கூறியதாவது: மோதிர வளையன் பாம்பு ஆசியா கண்டத்தில் காணப்படும் அரிதான இனமாகும். இது உலகளவில் “அழிவின் விளிம்பில்” உள்ள உயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

உடலை 'ஸ்பிரிங்' போல வளைத்து இரைகளை தாக்கி பிடிக்கக் கூடிய, இப்பாம்பு, மனிதனுக்கு தீங்கில்லாதது. எலி போன்ற சிறு விலங்குகளை உணவாகக் கொண்டு விவசாய நிலங்களின் இயற்கை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் இனமாகும். சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. 

சமீபகாலமாக நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் பாம்புகள் குடியேறுவது அதிகமாகி விட்டன. வீட்டுக்கு வெளியில் போட்டு வைக்கப்படும் தேவையற்ற பொருட்களில் தஞ்சமடைந்து, எலிகளை உணவாக சாப்பிட்டு வாழ துவங்கின்றன. அதே போல 'ஏசி' போன்ற உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படும் பைப் லைன் திறந்த வெளியில் இருப்பதால், அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. தங்களது வீடுகளில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, பைப் லைன்களை மூடி வைத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த மோதிர வளையன் பாம்பு (வக்கணத்தி) என்பது நஞ்சில்லாத ஒரு பாம்பு இனமாகும், இது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் காணப்படுகிறது. அதன் உடலில் உள்ள மோதிர வடிவ கோடுகள் காரணமாக இந்தப் பெயர் இதற்கு வந்தது. இது இரையை ஸ்பிரிங் போல சுற்றிப் பிடித்து உண்ணும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது. சில பகுதிகளில் இதை 'வக்கணத்தி' அல்லது 'கண்டங் குருவை' என்றும் அழைப்பார்கள்.

சாரைகளைப் போலவே, அதிகமாக வேட்டையாடி எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பவை இந்த மோதிர வளையன்கள். வயல்பகுதிகளில் இரவு நேரத்தில் எலி, தவளை போன்றவற்றை இந்த வக்கணத்தி என்கிற மோதிர வளையன் பாம்பு வேட்டையாடும். இதனால் இது விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பாம்பை பார்த்தால் அடித்து விட வேண்டாம். இதுகுறித்து தகவல் தெரிவித்தால் இவற்றை உயிருடன் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டு விடுவார்கள்.