தஞ்சாவூர்: தமிழகத்திலுள்ள வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என்கிற சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று பாமக கெளரவத் தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.கே. மணி தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலுள்ள வேலைவாய்ப்பில் 80 சதவீதத்தை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும். மத்திய அரசின் வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் 93 சதவீதமுள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களே இல்லை என்றால், வேலை இல்லா திண்டாட்டம் பெருகும்.
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழைத் தேடி என்ற தலைப்பில், 8 நாட்கள் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, மதுரையில் 28ம் தேதி நிறைவு செய்கிறார்.
தமிழகத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என அனைத்திலும் தமிழ் வேண்டும் என்பதே இப்பரப்புரையின் நோக்கம். இங்கு தமிழில் பெயர்ப் பலகை எழுத வேண்டும் என அரசாணை இருந்தும், தற்போது நடைமுறையில் இல்லை. தமிழகத்திலுள்ளவர்கள், பல மொழிகளில் கற்றுக் கொள்வது தவறில்லை. ஆனால் தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் தி. ஜோதிராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் கோ. ஆலயமணி, ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க. ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கோதை. கேசவன், முருகன், மாவட்டத் தலைவர் அமிர்த. கண்ணன், துணைத் தலைவர் ஜி.கே. வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல்
அதிராம்பட்டினம் பகுதியில், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவு வருகையால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளை தாண்டி விவசாய பணிகளிலும் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.
இதனால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், வட மாநில தொழிலாளர்களுக்கு, அனைத்து கட்டிட வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழக கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கட்டிடத் தொழிலாளிகள், சேர்மன்வாடி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மறியலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அதிராம்பட்டினம்– பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டது.