மத்திய மோடி அரசின் தேசிய பணமயமாக்கல் திட்டத்தை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அதிகாலை, மக்களை காப்பாற்ற பிரதமர் மோடியை துயில் எழுப்பும் போராட்டம் தஞ்சையில் மூன்று இடங்களில் நடைபெற்றது.
உடனடியாக மத்திய பாஜக மோடி அரசு மக்களுக்கு சேவை செய்கின்ற பொதுத்துறை நிறுவனங்களை அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்று மத்திய மோடி அரசை கண்டித்து, மக்களை காப்பாற்ற மோடியை துயில் எழுப்பும் விதமாக தஞ்சாவூரில் அதிகாலை 5 மணிக்கு மூன்று இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு ஜெபமாலைபுரம் தஞ்சை நகர்கிளை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தொமுச மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஏஐடியூசி சம்மேளன துணைத்தலைவர் துரைமதிவாணன், மத்திய சங்க பொதுச் செயலாளர் கஸ்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரந்தை புறநகர் கிளை முன்பு காலை 5.30 மணிக்கு நடைபெற்ற போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் க.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காலை 7 மணிக்கு நடைபெற்ற போராட்டத்திற்கு தொமுச கிளைச் செயலாளர் டி.ராஜேந்திரன் தலைமையில் கிளைத் தலைவர் எட்வின் பாபு, சிஐடியூமாநில துணைச் செயலாளர் ஜெ.வெங்கடேசன் , கிளைச் செயலாளர் எஸ்.செங்குட்டுவன், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்களை காபாற்ற மோடியை துயில் எழுப்பும் போராட்டத்தில், மூன்று கிளைகளும் ஏராளமான அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய பாஜக மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய ஆளும் பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை ஏலம் மற்றும் 25 ஆண்டு கால குத்தகைக்கு விடுவதன் மூலம் 6 லட்சம் கோடி நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டத்தை கண்டித்தும், மக்களுக்கு சேவை செய்வதற்காக போக்குவரத்து, வங்கி, மின்சாரம், இன்சூரன்ஸ், ரயில்வே, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள், சாலை போக்குவரத்து, தொலைத்தொடர்பு என்று பல்வேறு அத்தியாவசிய சேவை செய்யும் நிறுவனங்கள் மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வந்தது. இதனால் சமூக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி வளர்ச்சி, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேறிவந்துள்ளது.
தற்போது கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும் பாசிச மோடி அரசாங்கமானது மக்களுக்கு சேவை செய்கிற அத்தியாவசிய பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயப்படுத்தி வருகிறது. அவர்களுக்கு சேவை செய்கிறது. போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் சட்டங்கள் நான்காக குறைக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரானா முதல் அலை, இரண்டாம் அலையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளது. பொருளாதாரம் சரிவடைந்து வருகிற நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள், காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
அன்றாடம் உழைத்து வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் துயர் துடைத்து பாதுகாக்க வேண்டிய ஒன்றிய மோடி அரசாங்கம் தனது பொறுப்பில் இருந்து விலகி கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக தேசிய பணமயமாக்கல் என்ற திட்டத்தின் மூலம் 400 ரயில்வே நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 15 தேசிய விளையாட்டு அரங்குகள், 26,800 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகள், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு டவர்கள், ஓஎன்ஜிசி, கெயில் உள்ளிட்ட எண்ணெய் எரிவாயு குழாய்கள் உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு 25 ஆண்டுகாலத்திற்கு ஏலம் மற்றும் குத்தகைக்கு விட்டு 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட போகிறோம் என்று அறிவித்ததை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.