காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் ஆண்டுதோறும் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள விளை நிலங்களுக்கு 2239 வாய்க்கால்கள் மூலம் 9 ஆயிரத்து 750 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து பாசன வசதியை வழங்குகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணத்தினால் பெரும்பாலான விவசாயிகள் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றினாலும் விவசாய உற்பத்தி கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக நெல் உற்பத்தியில் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதற்கேற்ப நெல் சாகுபடியில் விளைச்சல் பெருகிய நிலையில் அறுவடை நாட்களில் கொள்முதல் தாமதம் ஏற்பட்டு பருவமழை அறுவடை பயிர்களை சாய்த்து விடுவதால் நெல் மணிகளின் ஈரப்பதம் அதிகரித்து விடுகிறது  இதனால் நெல் மூட்டைகளை காலத்தில் விற்க வழியின்றி விவசாயிகள் அவதி பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை, லாரிகள் போக்குவரத்து, உட்பட கொள்முதல் பணிகளில் தமிழ்நாடு முழுவதிலும் பிரச்சனைகள் உள்ளது. இந்த ஆண்டு சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொள்முதல் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 2113 நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றன. நேரத்தை பொருத்து கூடுதல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும் எனவும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் விவசாயிகள் தங்களது நெல்மணிகளை விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். நெல்லின் ஈரப்பதம், கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய முடியாத நிலை உருவாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



 

இந்த நிலையில் விவசாயிகளின் நெல் மணிகளை மின்னணு முறையில் கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது. வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இணையதளத்தில் தங்களது பெயர், ஆதார், சாகுபடி நிலம், உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் விவசாயிகள் தங்களது தொலைபேசி மூலமாக பதிவு செய்த பின்னர் விவசாயிகளுக்கு ஓடிபி வந்த பின்னர், அதில் விவசாயிகளின் விபரங்களை முழுமையாக பதிவிட வேண்டும். அதனை அடுத்து விவசாயிகளுக்கு தொலைபேசி எண்ணில் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கான தேதி அதில் குறிப்பிடப்படும். அதன் பின்னரே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யலாம் என இந்த திட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக காலதாமதம் முறைகேடு ஆகியவை குறைந்துவிடும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆரம்பகாலத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லுக்கான தொகையை உடனடியாக விவசாயிகளிடம் வழங்கி வந்தது. இந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு விவசாயிகளுக்கான தொகையை வங்கி கணக்கு மூலமாக வழங்கி வந்தது.



 

ஆனால் தற்பொழுது விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு மின்னணு முறையை பயன்படுத்தினால் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்திக்க நேரிடும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறு குறு விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை பாதுகாத்து வைப்பதற்கு இடம் இல்லாத சூழல் உள்ளது. மேலும் அனைத்து விவசாயிகளும் ஆண்ட்ராய்டு தொலைப்பேசி வைத்த இல்லாத சூழல் உள்ளது. அப்படி வைத்திருந்தாலும் அதில் பதிவு செய்யக்கூடிய திறன் கிராமப்புறங்களில் உள்ள பல விவசாயிகளுக்கு இல்லாத சூழல் உள்ளது. ஆகையால் இந்த திட்டம் விவசாயிகளுக்கு பயன் அளிக்க கூடிய ஒன்றாக இருக்காது ஆகையால் எப்போதும் போல் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.