சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது. கல்வெட்டில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி இந்நூலகம் முதலில் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் வழங்கப்பட்டனர். கி.பி. 1122 முதலே இருந்ததற்கான அடிக்கோள்கள் உள்ளன. இங்குத் தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன. வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், மதம், தத்துவம் முதலிய பலகலைகளில் சிறந்த நூல்கள் உள்ளன. 16, 17 நூற்றாண்டுகளில் தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்கள் சமற்கிருதம், தெலுங்கு, தமிழ் நூல்களைப் கொண்டு வந்து சேர்த்தனர்.
தஞ்சாவூர் மராத்திய அரசர்கள் மேலும் பல நூல்களைச் சேர்த்து நூல்நிலையமாக மாற்ற, ஊக்கத்தோடு செயற்பட்டனர். அதில் தலைசிறந்தவர் இரண்டாம் சரபோஜி ஆவார். இரண்டாம் சரபோஜி 1820 ஆம் ஆண்டு காசிக்கு சென்றபோது, ஏராளமான சமற்கிருத நூல்களை கொண்டு வந்து சேர்த்தார். மேலும், இவர் காலத்தில், மேனாட்டு மொழியிலான 5000 அச்சுப்புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. ஆகையால் தான், இந்நூலகம் சரபோஜி சரசுவதி மகால் நூல்நிலையம் என்று வழங்கப்பெறுகிறது. இந்நூலகத்திற்கு வெளியே கொலு மண்டபமாக இருந்த ஒரு மண்டபத்திலே,1807-இல் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் நிறுவப்பெற்ற சரபோஜி மன்னரின் உருவச்சிலை அழகாக அமைந்துள்ளது.
1871 இல் அரசாங்கத்தார் நூல் நிலையத்திலுள்ள நூல்களின் பட்டியொன்றை தயாரிக்குமாறு இடாக்டர் பரனெல் என்னும் நீதிபதிக்குப் பணித்தனர். அவர் இந்த நூல் நிலையமே உலக முழுவதிலும் மிகப் பெரியதும் மிக முக்கியமானதுமாகும் என்று கூறினார். 1918 இல் தஞ்சை மராட்டிய மன்னரின் சந்ததியர், தமது சொந்த உடைமையாக்கி, இந்நூலகத்தை அரசாங்கத்திடம் ஒப்புவித்தனர். இப்பொழுது தமிழ்நாடு அரசால் மேலாண்மை செய்யப்படுகிறது. உலக புகழ்பெற்ற இந்நுாலகத்தில் உள்ள பிரதிகளை மின்னுருவாக்கம் செய்ய அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்னுருவாக்க பணியினை செய்திமக்கள் தொடர்பு இயக்குனர் மற்றும் அலுவலக அரசு துணைச்செயலாளர் இணைய கல்வி கழகம் இயக்குனர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்து கூறுகையில்,
தஞ்சாவூர் சரபோஜி மகால் நூலகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரிய நூல்கள் , ஓலைச் சுவடிகள் ,காகிதச் சுவடிகள் முதலியவற்றை மின்னுருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ரூ.7.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இத்திட்டத்தை கண்காணித்து தரக்கட்டுப்பாடு செய்யும் பணியினை தமிழ் இணைய கல்வி கழகம் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை ஆய்வு செய்யப்பட்டது. இங்கு இதுவரை 50 லட்சம் பக்கங்களுக்கு மேல் மின் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நூல்கள் அனைத்தும் www.tamldigitalllabrary.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விரைவாக மின் உருவாக்க பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். பின்னர் செய்தி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள சிலைகள், ஒலைசுவடிகள், குறிப்புகளை பற்றி கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் வருவாய்என்.ஓ.சுகபுத்ரா, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணை இயக்குனர் கோமகன், உதவி இயக்குனர் காமாட்சி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.