அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே மாவட்டங்கள் தோறும் கோஷ்டி பூசல் உண்டு. ஆனால், அடிதடி சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு வெளிப்படையாக தெரியாது. அதிமுக ராணுவ கட்டுப்போடுகளோடு இயங்கிய காலமாக கருதப்பட்ட ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோதும் கூட மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் துணை பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் இடையே மாவட்டங்கள் தோறும் உள்கட்சி பூசல் இருந்து வந்தது.




இதில், ஜெயலலிதா ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கு கட்சி மற்றும் ஆட்சியில் பதவியையும், அதிகாரத்தையும் வழங்கிய போது மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒதுங்கி நிற்பார்கள். ஆனால், அதிருப்தியாளர்கள் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுக்கு எதிராக ஜெயலலிதாவுக்கு புகார் மனு அனுப்புவது, கட்சியில் அவர்களுக்கு எதிராக உள்ளடி வேலைப்பார்ப்பதுமாக இருப்பார்கள். ஆனால், தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவுக்கு பயந்து தேர்தல் பணியில் வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பார்கள்.




இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் காலத்தில் அதிமுகவினர் சில கட்சியினரை போல வெளிப்படையாகவே கருத்து மோதலை தாண்டி மோதிக்கொண்டார்கள். மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மற்ற துணை அமைப்புகளில் இருந்தவர்கள் இடையே இருந்த கோஷ்டி பூசல் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால், ஜெயலலிதா போன்று அதிமுகவில் ஆளுமையாகவும், செல்வாக்காகவும் ஓபிஎஸ்-இபிஎஸ் இல்லாததால் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அதனால் இடைத்தேர்தல், கடந்த சட்டமன்ற தேர்தல், மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒற்றை தலைமை பிரச்சினை தற்போது பூதாகரம் அடைந்து இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ளார்.




இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேட்டில் அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர் பீடத்தில் 18 சித்தர்கள் தனித்தனி சன்னிதியில்  அருள்பாலிக்கின்றனர். அங்கு  குரு பூர்ணிமா சிறப்பு யாகம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி .பழனிசாமி  நிரந்தர பொது செயலாளராக பொறுப்பேற்க வேண்டும், அனைத்து வழக்குகளும் நீங்கி இரட்டை இலை மற்றும் கட்சி அலுவலகம் அனைத்தும் பெற்று அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையுடன் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி  மலர வேண்டும் என வேண்டி சிறப்பு யாகம்  நடைபெற்றது. 




முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை வழிபாடு   செய்யப்பட்டது . தொடர்ந்து 108 வேதிகை , மூலிகை  பொருட்கள் கொண்டு சிறப்பு பெளர்ணமி யாகம் நடைபெற்று, பூர்ணாஹூதி, மகா தீபாரதனை கட்டப்பட்டது. யாகத்திற்கான ஏற்பாடுகளை அதிமுக மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி செல்வ முத்து குமரன் தலைமையில் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட  முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் செய்திருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண