தென்னை மரம் அனைத்து விதத்திலும் மக்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒன்று. தென்னம்பாளை அரும் மருந்தாக பயன்படுகிறது. இயற்கை நமக்கு கொடுத்த அற்புத வரம் இளநீர். வெயிலின் வெக்கையை தணித்து, உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மை கொண்டது இளநீர்.

தேங்காய் பயன்படுத்தாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா. சமையலில் தனக்கென்று தனியிடத்தை பிடித்துள்ளது தேங்காய். கொப்பரை தேங்காய் எண்ணெய் எடுக்க பயன்படுகிறது. எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது. தென்னங்குருத்து உணவாக பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல்தான் தேங்காய் பூவும் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளநீர், தேங்காய், தேங்காய் பால் போன்றவற்றை நாம் அடிக்கடி பருக முடிந்தாலும் தேங்காய் பூ என்பது அரிதாக கிடைக்கும் ஒன்று. ஏனென்றால் தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். முக்கியமாக ஆற்று மண்ணில் இதை புதைக்க வேண்டும். தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சிதான்.

தேங்காய் பூவில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்தால் அசத்துதான் போவீர்கள். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தேங்காய் பூ சென்னை போன்ற பெரிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மக்கள் கொடுத்த ஆதரவு, விற்பனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தஞ்சையிலும் தேங்காய் பூ விற்பனை சக்கைப்போடு போடுகிறது. சரிங்க முதலில் தேங்காய் பூவில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. தேங்காய்ப் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச் சத்துக்களினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காகக் கூட்டிவிடும். அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்களைத் தவிர்க்க முடியும்.





அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்போது தேங்காய்ப் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத சக்தி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த தேங்காய்ப் பூ இருக்கும். இந்த தேங்காய்ப் பூவில் உள்ள மினரல்களும், வைட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை விரட்டியடிக்கிறது.

தேங்காய்ப்பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகின்ற அபார சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி தேங்காய்ப் பூவை சாப்பிடுவதனால், ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் பயன்படுகிறது. இதயக் குழாய்களில் படிகின்ற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்னையை சரி செய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய்ப் பூ செயல்படும். புற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ûஸ நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை தேங்காய்ப் பூ கொண்டிருக்கிறது. இது புற்றுநோய் உண்டாகாமல் காக்கிறது.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு தேங்காய்ப் பூ உதவுகிறது. இதில் உள்ள கலோரியின் அளவும் மிக மிகக் குறைவே. இதனால் எடையும் கூடாது. உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதினால் உடலில் கொழுப்புகள் தேங்காமல் உடல் எடையையும் வேகமாகக் குறைக்க உதவுகிறது. கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான பிரச்னைகளையும் தீர்க்க உதவுகிறது. இப்படி ஏராளமான மருத்துவப்பயன்கள் தேங்காய்ப்பூவில் அடங்கி உள்ளது.


 





இப்படி ஏராளமான உடல்நல பயன்களை அளிக்கும் தேங்காய்ப்பூவை சென்னையிலிருந்து மினி லாரியில் கொண்டு வந்து விற்பனை செய்கிறார் வினோத். தஞ்சையில் மேம்பாலம் அருகே ராமநாதன் மருத்துவமனை ரவுண்டானா செல்லும் சாலை, மருத்துவக்கல்லூரி சாலை,  பட்டுக்கோட்டை பிரிவு சாலை ஆகியவற்றில் தேங்காய்ப் பூ விற்பனைக்காக கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டுள்ளது.

முளைத்த தேங்காயை வெட்டி அதனுள் இருக்கும் பூவை அழகாக எடுத்து தருகின்றனர். அளவுக்கு ஏற்றவாறு ஒரு தேங்காய் பூ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய்ப்பூவை பார்க்கும் தஞ்சை மக்கள் தங்கள் வாகனங்களை ஓரங்கட்டி தேங்காய்ப் பூவை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். வீட்டிற்கும் வாங்கி செல்கின்றனர். இந்த தேங்காய் பூ தஞ்சை மாவட்டத்திலும் விற்பனைக்கு வந்துள்ளது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து தேங்காய் பூ வியாபாரிகள் கூறுகையில், நாங்கள் சென்னையில் இருந்து இந்த தேங்காய்ப்பூவை விற்பனைக்காக கொண்டு வருகிறோம். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மொத்தமாக முளைத்த தேங்காயை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம். இதை ஆற்று மண்ணில்தான் விதைக்க முடியும். தமிழகத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்துள்ளோம். ஆனால் தஞ்சை மக்கள் வெகு ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதில் உள்ள மருத்துவ குணங்கள் இப்பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. பிற பகுதிகளை விட இங்குதான் விற்பனை அதிகம். ஒரு நாளைக்கு குறைந்தது. 100லிருந்து 150 தேங்காய்ப்பூக்கள் விற்பனை ஆகிறது, ஒரு மாதம் வரை தங்கி இந்த விற்பனையை முடித்துவிட்டு செல்வோம் என்று தெரிவித்தனர். விலை சற்று கூடுதலாக இருந்தாலும் மக்களின் ஆர்வம் அதில் உள்ள மருத்துவக்குணங்களால் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண