கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் சுமார் ரூபாய் 2 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கும்பகோணம் கைத்தறி பட்டு ஜவுளி தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

  நடைபெற்றது. கூட்டத்திற்கு கைத்தறி பட்டு ஜவுளி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் பிரேம்குமார் பொருளாளர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




கூட்டத்தில்,  கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களான கோறா, பாவு, ஜரிகை விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. எனவே இனி தயாரிக்கப்படும் புடவைகளுக்கு முந்தி புட்டா ரகங்களுக்கு ரூபாய் 600 ரூபாயும் மற்ற ரகங்களுக்கு ஏற்றார்போல் ரூபாய் 1000 வரையிலும்  விலையை உயர்த்தி வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த உள்ளோம்.  ஜவுளி உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கும்பகோணம் பகுதியில் பட்டு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் தொழிலாளர்கள் 27ஆம் தேதி முதல் வருகிற ஜனவரி 2ஆம் தேதி வரை கைத்தறி பட்டு உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.கூட்டத்தில் துணைத் தலைவர்கள் கணபதி, ஆனந்தன், துணை செயலாளர்கள் செல்வராஜன், பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பட்டு ஜவுளி உற்பத்தி தொழிலாளர்கள் அறிவித்துள்ள இந்த உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தால் சுமார் 2 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.




இது குறித்து கைத்தறி பட்டு ஜவுளி தொழிலாளர்கள் கூறுகையில், பட்டு நெசவுத்தொழில் குடிசைத்தொழிலாக தான் உள்ளது. அதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால், ஏழை நெசவுத்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெரும்பாலான நெசவுத்தொழிலாளர்கள், நெசவுத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள். தற்போது நெசவுத்தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.   கும்பகோணம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இருந்த நிலையில், தற்போது நெசவுத்தொழில் முடக்கம் காரணமாக 50 சதவீதம் நெசவாளர்கள் தான் உள்ளார்கள்.




இதே நிலை நீடித்தால், சொற்ப அளவில் மட்டுமே நெசவாளர்கள் இருப்பார்கள்.  தற்போது, கச்சா பட்டின் விலை வரலாறு காணாத வகையில் உயந்துள்ளதால், பட்டு சேலை விலை அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் வாங்குவது குறைந்து விட்டது. இதனால் சேலைகள் மற்றும் பட்டுத்துணிகள் அதிகளவில் தேக்கம் அடைந்து விட்டது.  கச்சா பட்டுவை, பெருமுதலாளிகள் பதுக்குவதை தடுத்தால் தான் பட்டு நெசவுத்தொழில் முன்னேற்றம் அடையும். இதில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கும்பகோணத்திலுள்ள நெசவாளர்களின் நிலை கேள்வி குறியாகும். மணப்பெண் பட்டு சேலை உடுத்தி வந்தால் தான் பெருமை எனும் வழக்கம் இன்றளவும் உள்ளது; ஆனால் கைத்தறி பட்டு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கை கந்தல் துணியாகி உள்ளது.