கும்பகோணத்தில் கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு பழையபேருந்து நிலையம் பகுதியில் பொது மக்களின் நலனுக்காக, சுமார் 50 அடி உயரத்தில் இரும்பினாலான டவரில் அமைக்கப்பட்டது தற்போது உழவர் சந்தையில் உள்ள அலாரம் பல ஆண்டுகள் ஆனாலும், மழை வெயிலினால் இரும்பு டவர்கள் துருபிடிக்காமல் அப்படியே உள்ளது. வேலைக்கு செல்லும் கும்பகோணம் பகுதி மக்களுக்கு நேரத்திற்கு செல்ல  வேண்டும் என்பதற்காக காலை 6 மணி , 9 மணி மதியம் 1 மணி , மாலை 6 மணி, இரவு 8 மணி என உழவர் சந்தையில் உள்ள இரும்பு  டவரில் அமைக்கப்பட்ட அலாரம் எழுப்பும் ஒலியினை வைத்து சென்று வந்தனர். அலாரத்தில் எழுப்பும் ஒலியை கொண்டு வேலை செய்யும் நேரத்தில் கணக்கீட்டு சென்று வந்தனர்.


கும்பகோணத்தில் மையப்பகுதியில் இருப்பதால், சுமார் 5 கிலோ மீட்டர் துாரம் வரை அலாரத்தின் ஒலி கேட்பதால், கும்பகோணம் நகர மற்றும் கிராமத்தை சேர்ந்தவர்கள் பயன்பெற்று வந்தனர். இதே போல் கும்பகோணம் நகரத்தில் உள்ள தொழிற்கூடங்கள், சீவல் பேக்டரிகள், புகையிலை நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ் பணிமனைகள் பணியாற்றுபவர்கள், பொது மக்கள் பஸ் மற்றும் ரயிலுக்கு செல்லவேண்டும் என்றால், இந்த அலாரத்தின் ஒலியை கணக்கீட்டு சென்று வந்தனர். மேலும் கோயில்களுக்கு செல்பவர்கள், அலாரத்தை வைத்து கோயில் திறந்திருப்பார்கள் என்று சென்று வந்தனர்.



இதே போல் சினிமா தியேட்டர்களில் திரைப்படம் போட்டிருப்பார்கள் என அலாரத்தை வைத்து தியட்டர்களுக்கு சென்று வந்தனர்.ஒரு காலத்தில் கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள உழவர் சந்தையிலுள்ள அலாரம் பொது மக்களுக்கு அத்தியாவசியமாகவும்,முக்கியமாகவும் கருதப்பட்டது.இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அலாரம் செயல்படாமல் காடசிபொருளாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் போதுமான பராமரிப்பு செய்யாததால், தற்போது வெறும் அலாரம் இயந்திரம் மட்டும் உள்ளது. அலாரம் எழுப்பும் இயந்திரம் மேற்கூரை பெயர்க்கப்பட்டு வெறும் கம்பிகள் மட்டும் உள்ளது.




இதனையறிந்த அப்போதைய திமுக முன்னாள் அமைச்சர் கோசி.மணி, சிறப்பு நிதி ஒதுக்கி, உடனடியாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அலாரம் செயல்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் வந்ததால், அலாரத்தை பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் அலாரமுள்ள இயந்திரத்தில் பறவைகள் கூடு கட்டியும், மழை நீர் புகுந்து வருவதால், பல ஆண்டுகள் பழமையான அலாரம் செயல்படாமல் காட்சி பொருளாக இருப்பது வேதனையான விஷயமாகும்.எனவே, கும்பகோணத்திற்கு பாரம்பரியமானதும் பழமையான, கும்பகோணம் உழவர் சந்தையில் செயல்படாமல் காட்சி பொருளாக இருக்கும் அலாரத்தை சீர் செய்ய,நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.