தஞ்சாவூர்: தஞ்சையில் வெளியில போனா வெயிலில் கருவாடாகி விடுவோம் என்ற அச்சத்தில் கோடை வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள குழாய் பொருத்தப்பட்ட மண்பானைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
கொளுத்தும் வெயிலால் அவதி
தமிழக மக்களிடையே மண்பானை, மண்சட்டிகள் என்பதெல்லாம் அவர்களின் வாழ்வியலோடு கலந்த ஒன்றாக இருந்தது. மண்பானையில் சமைக்கும் சோறும், அந்த பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனி சுவையுடையது. பானைகளில் இயற்கை முறையில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் உடல் சூட்டையும், தாகத்தையும் தணிக்கும். தற்போதைய கால கட்டத்தில் பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் சில்வர் பாத்திரங்கள், ஈயப்பாத்திரங்களின் வருகையால் மண்பானைகளின் பயன்பாட்டை மக்கள் மறந்தே போய்விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கோடைகாலம் வந்தால்தான் மக்கள் மண்பானைகளை தேடுகின்றனர்.
மண்பானைகள் வாங்க ஆர்வம்
ஆனால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மண்பானைகளை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை மனதில் கொண்டு மண்பாண்ட தொழிலாளர்கள் புதுப்புது பானை ரகங்களை தயார் செய்கின்றனர். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே மக்களை எச்சரித்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக தஞ்சையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடலில் இருந்து நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் அதிக சோர்வு ஏற்படுகிறது. பகல் நேரத்தில் வெளியே செல்வதற்கே அச சப்படும் நிலை உள்ளது.
பழச்சாறுகள் குடிக்கும் மக்கள்
இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள மக்கள் கேழ்வரகு கூழ், இளநீர், கரும்புசாறு, பழச்சாறுகளை அதிக அளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் மண்பானைகளை வாங்கி வீட்டில் தண்ணீர் சும்மா ஜில்லுன்னு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் வெயில் சூட்டிலிருந்து தப்பித்து கொள்ளலாம் என மண்பானைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
குழாய் பொருத்தப்பட்ட மண்பானைகள்
இந்த மண் பானைகள் தற்போது குழாய் பொருத்தப்பட்டு விற்பனை வருகிறது. தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனுடன் சமையலுக்கு பயன்படுத்தும் மண்சட்டிகள், உண்டியல், திருஷ்டி பானைகள் என பல்வேறு ரகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வல்லம் நம்பர் 1 சாலை உள்ளிட்ட சில இடங்களில் சாலையோரத்திலும் மண்பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த மண்பானைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதில் பைப் பொருத்தப்பட்டுள்ளதால் மக்கள் வெகு ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
மண்பானை விற்பனையாளர்கள் மகிழ்ச்சி
இது குறித்து மண்பானை விற்பனையாளர் கூறும் போது, கோடைகாலம் என்பதால் ஏழைகளின் குளிர்பதன பெட்டியாக மண்பானைகள் தான் திகழ்கின்றன. மண் பானையில் இயற்கையான முறையில் குளிரூட்டப்பட்ட நீரை பருக முடியும். அதே போல் மண்பானை ஒரு மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவியாகும். பானையில் குடிதண்ணீரை ஊற்றிவைத்து 2 முதல் 5 மணிநேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள தீய கிருமிகளை மண்பானை உறிஞ்சி அழித்துவிடும்.
தற்போது கோடைகாலம் என்பதால் மண்பானைகளையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதனால், பொதுமக்கள் விரும்பும் பல்வேறு ரகங்களில் மண்பானைகள் தயார் செய்து வருகிறோம். அதிலும், குழாய் பொருத்தப்பட்ட நவீன மண்பானைகளையே ஆர்வத்துடன் அதிகம் பேர் வாங்குவார்கள். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் மண்பானையை தேடி மக்கள் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.