தஞ்சாவூர்: மினி பேருந்துகள், மின்சார பேருந்துகள், பணிமனைகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஏஐடியுசி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
மத்திய அரசின் தனியார் மயம் மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருவதை கண்டித்தும், போக்குவரத்து கழகங்களில் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பாக இன்று மதியம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் போக்குவரத்து மத்திய சங்கத் தலைவர் என். சேகர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், கௌரவத் தலைவர் கே. சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் துவக்கி வைத்து உரையாற்றினார். போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர்ப்புற வழித்தடங்களில் மினி பேருந்துகளுக்கு தாராளமாக அனுமதி அளித்தன் விளைவாக கழகங்களின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக வாங்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகளையும், பேருந்துகளை பராமரிப்பதற்காக தண்டையார் பேட்டை, வியாசர்பாடி உட்பட நான்கு பணிமனைகளையும் தனியாருக்கு கொடுத்துள்ளது. தற்போது தொலைதூர வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் தாராளமாக இயக்கலாம் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. தனியார் முதலாளிகளுக்கு ஆதரவான இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களே மினி பேருந்துகளையும், மின்சார பேருந்துகளையும் ஏற்று நடத்த வேண்டும். போக்குவரத்து கழகங்களில் தனியார் மய நடவடிக்கைகள் முற்றிலும் கைவிட வேண்டும், நடத்துனர், ஓட்டுனர்,தொழில் நுட்ப பணியாளர், அலுவலகப் பணியாளர், பாதுகாவலர், உணவகம் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 35 ஆயிரம் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும், நிரந்தரப் பணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு வைத்து தேர்ச்சி பெற்று காத்திருக்கும் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும்.
1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை தற்போது நடைமுறையில் உள்ள டிரஸ்ட் கழக பென்ஷன் திட்டத்தில் இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும், கடந்த 2024 ஆகஸ்ட் முதல் 20 25 டிசம்பர் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வு கால பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகி எஸ்.ராமசாமி, ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் டி.சந்திரன்,என்.ஆர். செல்வராஜ், என்.ராஜேஷ் கண்ணன், ஆர்.ரங்கதுரை, டி.செந்தில் ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் டி.கஸ்தூரி, அ.இருதயராஜ், எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் சங்க பொருளாளர் சி.ராஜமன்னன் நன்றி கூறினார்.