கும்பகோணத்தில் தொழிலில் ஏற்பட்ட கடன் தொல்லையால் கணவன் - மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கும்பகோணம் நாணயக்கார தெருவை சேர்ந்தவர் அருணாசலம் மகன் மோகன் (55) நகைத் தொழில் செய்பவர். இவரது மனைவி ஜெயசுதா (49). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. மோகன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் நாணயக்கார தெருவுக்கு வாடகைக்கு குடி வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக நகைத் தொழில் செய்து வந்த நிலையில், மோகன் கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.

  இதனால் மோகனுக்கு பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது தொழிலையும் சரிவர செய்யமுடியவில்லை. இதன் காரணமாக குடும்ப செலவுக்கு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.




கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மோகனும், ஜெய்சுதாவும் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினர். இதே போல் நகைகளை கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தான் அவமானப்பட்டு விடுமோ என்று நிலையில், 22 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த மோகனின் நண்பர்கள் 2 பேர் மோகன் வீட்டுக்கு வந்துள்ளனர்.




வீட்டு வாசலில் இருந்து 2 பேரும் மோகனை பெயர்சொல்லி கதவைத் திறக்குமாறு அழைத்துள்ளனர். வெகுநேரமாகியும் மோகன் வீட்டு கதவு திறக்காததால சந்தேகமடைந்த மோகனின் நண்பர்கள் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் தகவல் சொல்லியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி   கும்பகோணம் கிழக்கு போலீஸில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், மகாலட்சுமி மற்றும் போலீஸார் கதவை திறந்து பார்த்தபோது மோகன் மற்றும் அவரது மனைவி ஜெயசுதா இரண்டு பேரும், வீட்டில் இருந்த புடவையை சுவரில் மாட்டி ஒரே அறையில் தூக்கில்  தொங்கியது தெரியவந்தது.




இந்நிலையில் மோகன் வீட்டருகே வசித்தவர்கள் சம்பவம் பற்றி மோகனின் சகோதரி சுமித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சுமித்திரா தூக்கில் தொங்கிய அண்ணன் மோகன், அண்ணி ஜெயசுதா இருவரையும் பார்த்து கதறி அழுதார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து சுமித்ரா கும்பகோணம் கிழக்கு போலீஸூக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் மோகன் மற்றும் ஜெய்சுதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை காரணம் யாராவது நெருக்கடி கொடுத்தார்களா, மிரட்டினார்களா கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.