திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வருகை தந்திருந்தார் அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி, டெல்லியில் விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இம்மாதம் 27 ஆம் தேதி அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கோரியும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், கல்வியை பொது பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்த போராட்டம் தமிழகத்தில் நடைபெற உள்ளதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, மத்திய கால கடன்களை தள்ளுபடி செய்யாமல் விட்டு விட்டது. எனவே திமுக அரசு இந்த மத்தியகால கடனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
கொரோனா ஊரடங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்து மாணவ மாணவிகள் பலரும் தற்போது அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்கள் இனிவரும் காலங்களில் அரசு பள்ளியிலேயே தொடர்ந்து படிக்கும் வகையில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அதிமுக ஆதரித்தது மட்டுமின்றி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்து பாஜகவுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது அதிமுக. மத்திய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான செயல்பாடுகளால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒருமித்து செயல்பட தொடங்கியுள்ளன. அதன் வெளிப்பாடாக கடந்த 27 ஆம் தேதி கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை 19 கட்சிகள் இணைந்து நடத்தியுள்ளன. இந்த ஒற்றுமை வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என ஜி.ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.